அடுத்தவரை குறை சொல்வதே நம்மில் அனைவருக்கும் பெரிய ஆனந்தமாக இருக்கும் . அதிலும் நாம் சரியாக செய்து அடுத்தவர் தவறாக செய்தால் இன்னும் சந்தோசமாக அடுத்தவரிடம் சொல்லிக்கொண்டு இருப்போம் .சில பேருக்கு எதைச் செய்தாலும் நிறைவே ஏற்படாது. அதிலும் அவர்கள் ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலோ, ஆசிரியர் பதவியிலோ இருந்துவிட்டால் அவருக்குக் கீழே இருப்பவர்களின் கதி அதோ கதிதான். அது சரியில்லை, இது சரியில்லை என்று கூறி அவர்களின் உயிரை எடுத்து விடுவார். அதாவது தனக்கும் சரியாக செய்யத் தெரியாது, செய்கிறவர்களையும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். குறை சொல்வது என்பது மனிதனுக்கு இயற்கையாவே அமைந்த குறைபாடு. அடுத்தவர்களை மட்டம் தட்டுவதன் மூலம் தனது உயரத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சிதான் இந்தக் குறை சொல்லுதல்.
இது ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் விரோத எண்ணத்தின் காரணமாகவே இதுபோன்ற குறை சொல்லல் என்னும் மோசமான செயல்பாடு வந்து ஒட்டிக் கொள்கிறது. பொதுவாகத் தனக்கு வேண்டியவர்களாக இருந்தால் அவர்கள் மிகப் பெரிய தவறு செய்திருந்தாலும் அது கண்ணுக்குத் தெரிவதில்லை. அதேநேரத்தில் பிடிக்காதவர் களாக இருந்தால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் குறையைக் காண முயல்வது மனித இயல்பு.‘மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்’ என்பார்கள்.இது மாமியார் _ மருமகளுக்கு மட்டுமல்ல, அத்தனை பேர்களுக்குமே பொருந்தும்.மற்றவர்களுக்குக் கிடைக்கும் நற்பெயர், பெருமை, வளர்ச்சி, புகழ், சந்தோஷம் போன்றவை மனதிற்குள் பொறாமை தீயைக் கொளுத்திப் போடும். அந்த நெருப்பே மளமளவென்று விரிந்து பரவி எரித்து நாசமாக்கும். தனது வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவும், தனது பதவி உயர்வை அடையவும், உயரதிகாரிகளிடம் நல்ல பெயரைத் தட்டிச் செல்ல வேண்டுமென்ற ஆசையும், வேகமும் துளிர்விடும். அப்போது அடுத்தவர்களை அழித்தால் மட்டுமே இது சாத்தியம் என்று தோன்றும். எனவே அவர்களைப் பற்றிய தப்பான விமர்சனங்கள் வேண்டுமென்றே அவர்களால் முன்னெடுக்கப்படும். அச்சத்தின் காரணமாகவே குறை கூறுதல் என்ற நிலையைக் கடைப்பிடிக்கிறார்கள் பலரும்.
தனது பொறுப்புகளை தட்டிக் கழிக்க விரும்பும்போது முதலில் வந்து நிற்பது இந்தக் குறை சொல்லுதல்தான்.பொதுவாகக் குறைசொல்லும் போக்கு ‘ஈகோ’வில் இருந்துதான் தொடங்குகிறது. ஒருவரிடம் ஈகோ என்னும் அரக்கன் நுழைந்து விட்டால் மற்றவர்களிடம் உள்ள குறைகளை அவர்கள் பூதக்கண் ணாடியை வைத்துக் கொண்டு தேடுவார்கள். இல்லாத ஒன்றை இருப்பதுபோல ஜோடனை செய்துவிடுவார்கள்.பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவே மற்றவர்களைக் குறை சொல்லும் மனிதர்களும் உண்டு. தாழ்வு மனப்பான்மை உடையவர்கள் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். பலருக்கு முன்பாக தான் மட்டும் தனியாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இவ்வாறு அதிரடியாகக் குறை சொல்கிறார்கள்.
தன்னை புத்திசாலியாகக் காட்டிக் கொள்வதற்காகவும் இப்படிப் பட்ட இழிவு செயலில் சிலர் ஈடுபடுவது உண்டு. அடுத்தவர்களின் குறைகளைக் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டால் தான்
புத்திசாலியாக மாறிவிடுவதாக இவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.
கடையில் பொருட்கள் வாங்கச் செல்லும்போது வேண்டுமென்றே விற்பனையாளரைக் குறை சொல்வார்கள். மானேஜரிடம் போய், ‘‘என்ன சேல்ஸ்மேனை வேலைக்கு வைத்திருக்கிறீர்கள்? முதலில் அவனை வீட்டுக்கு அனுப்புங்கள். எதற்குமே லாயக்கில்லை’’ என்று சொல்வார்கள்.
அந்தக் கடையில் குவிந்திருக்கும் அத்தனை பேரின் பார்வையும் தன் பக்கமாகத் திரும்ப வேண்டும் என்பது மட்டுமே அப்போது அவரது ஆசையாக இருக்கும்.
‘வாய்ப்பு வந்து வாசல் கதவைத் தட்டும்போது கூட 'சப்தமாகக் கதவைத் தட்டுகிறது' என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள்’ என்கிறார் ஆஸ்கார் ஒயில்டு.நன்மை கிடைக்கும்போதுகூட அந்தத் தீய பழக்கம்தான் முன்னால் வந்து நிற்கிறது. பொதுவாகக் குறை சொல்லும் தன்மை ஆண்களை விடவும் பெண்களிடமே அதிகமாகக் காணப்படுவதாக சிலர் கூறுவது உண்டு. ஆனால் உண்மை அதுவன்று. குறை சொல்லும் பழக்கத்திற்கு ஆண், பெண் என்று பாலின வேறுபாடுகள் கிடையாது என்பதே உண்மை.ஒருநாள் தன் கணவனை காய் வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டாள் மனைவி.அவனும் கடைக்குப் போய் வெண்டைக்காய் வாங்கி வந்தான்.
காயைப் பார்த்த மனைவி கோபப்பட்டாள், ‘‘என்ன காய் வாங்கி வந்திருக்கீங்க? அத்தனையும் முத்தலாக இருக்கு. நல்ல காயா வாங்கத் தெரியாதா?’’ என்று சீறினாள். அப்புறம் இன்னொரு நாளும் காய் வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டாள் மனைவி. அவனும் அப்படியே கடைக்குச் சென்று பிஞ்சு வெண்டைக் காயாகப் பார்த்துப் பார்த்து வாங்கி வந்தான். காயைப் பார்த்த மனைவி, ‘‘என்ன இது! வெண்டைக்காய் இவ்வளவு பிஞ்சாக இருக்கு. இதை எப்படி சமைப்பது. நொடியில் கூழாகிடுமே! காயைக் கூட நல்லதாப் பார்த்து வாங்கத் தெரியாத நீங்க என்னதான் ஆபிசுல கிழிக்கிறீங்களோ!’’ என்று இன்றும் கோபமாகக் கத்தினாள் மனைவி.
அவன் நொந்து போனான்.அப்புறம் மற்றொரு நாள் காய் வாங்கச் சென்றவன், எப்படி வாங்கினாலும் மனைவி குறை சொல்லிக் கொண்டே இருப்பதால் அன்று அங்கு காய் வாங்க வந்திருந்த ஒரு பெண்ணிடம் சொல்லி நல்ல வெண்டைக்காயாக வாங்கி வந்தான்.
இன்று எப்படியும் மனைவி தன்னைக் குறை சொல்ல மாட்டாள் என்று உறுதியாக நம்பினான்.
பையைப் பிரித்துப் பார்த்த மனைவி, ‘‘உங்களுக்கு வெண்டைக் காயை விட்டால் வேறு காயே வாங்கத் தெரியாதா?’’ என்று கத்தினாள்.ஆக, குறை சொல்கிறவர்கள் நீங்கள் எப்படிக் கஷ்டப்பட்டு உழைத்தாலும் நல்ல பெயரை எடுக்கவே முடியாது.அதே நேரத்தில் குறை சொல்லிக் கொண்டே இருப்பவர்கள் தங்கள் வாழ்வில் உண்மையான சந்தோஷத்தைப் பெறவே முடியாது.
No comments:
Post a Comment