வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Sunday, July 24, 2016

எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் ?

*விருதுநகரில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் சிவாம்சம் கொண்டவள். அதனால் கருவறையில் தேவிக்கு முன் சிங்கத்திற்குப் பதிலாக நந்தி  வீற்றருள்கிறார். கண் நோய் உள்ளோர் தேவிக்கு அபிஷேகம் செய்த நீரால் கண்களைக் கழுவ நோய் நீங்குகிறது.

*மதுரை சோழவந்தானில் உள்ளது ஜெனகை மாரியம்மன். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரசாதமான தீர்த்தத்தை அருந்த நோய் மறைகிறது.

*மதுரை-எல்லீஸ் நகரில் அருளும் தேவி கருமாரியம்மனை அனைத்து மதத்தினரும் வழிபட்டு நலம் பெறுகிறார்கள்.

*புதுக்கோட்டை-நார்த்தாமலையில் முத்து மாரியம்மன் திருவருள் புரிகிறாள். இங்கு அக்கினி காவடி எடுத்தால் தீராத நோய் தீர்கிறது. மழலை வரம்  வேண்டுவோர் கரும்புத் தொட்டில் கட்டுகிறார்கள்.

*நீலகிரி, குன்னூரில் தந்திமாரியம்மன் அருளாட்சி புரிகிறாள். தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் இந்த மாரியிடம் மனமுருக வேண்டிக்கொள்ள, உடனே  பெருமழை பெய்கிறது.

*ஊட்டியில் மகாமாரி, மகாகாளி இருவரும் ஒரே கருவறையில் அருள்கின்றனர். இங்குள்ள காட்டேரியம்மன் சந்நதியில் மந்திரித்துத் தரும் முடிக்கயிறு,  தோஷங்கள், நோய்கள், பில்லி சூனியம் விலக்குகின்றனவாம்.

*நாமக்கல்-ராசிபுரத்தில் நித்யசுமங்கலி மாரியம்மனை தரிசிக்கலாம். வருடம் முழுதும் அம்பிகையின் எதிரே சிவாம்சமான கம்பம் நடப்பட்டிருப்பதால்  இப்பெயர். ஐப்பசி மாதம் புதுக் கம்பம் நடும்போது தயிர்சாதம் நிவேதிப்பர். அந்த தயிர்சாத பிரசாதத்தை உண்பவர்களுக்கு அடுத்த வருடமே மழலைப்  பேறு கிட்டுகிறது.

*கோவையில் ஆட்சிபுரியும் தண்டு மாரியம்மன், குடும்ப வளம் பெருகவும் தீராத நோய்கள் தீர்ந்திடவும் அருள்கிறாள்.

*சமயபுரம் மாரியம்மன், மாசி மாதம் தன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பவள். தாலிவரம் வேண்டும் பெண்கள் தங்கள்  தாலியை நேர்த்திக்கடனாகச் செலுத்துகிறார்கள்.

*திருச்சி மணப்பாறையிலுள்ள மாரியம்மன் கோயிலில் திருமணத்தடை உள்ளவர்கள் மஞ்சள் கயிறு வாங்கி அம்மன் சந்நதியின் பின்னே உள்ள  வேப்பமரத்தில் கட்டி நேர்ந்து கொள்ள, விரைவில் மணவாழ்வு கிட்டுகிறது.

*கோடீஸ்வரி மாரி என்ற கோட்டைமாரி திருப்பூரில் அருள்கிறாள். கருவறையில் அம்மனின் இரு புறங்களிலும் லட்சுமி, சரஸ்வதி இருவரும்  அம்மனைப் போலவே சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த அன்னையிடம் பூவாக்கு கேட்பது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு.

*தேனி-பெரிய குளத்தில் உள்ள கௌமாரியம்மனுக்கு விவசாயம் செழிக்க தானியங்கள், காய்கறிகள், கனிகளைப் படைக்கின்றனர்.

*கரூர் மகா மாரியம்மன், வழக்கு, வியாபார சிக்கல் நீங்க, காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்க அருள்கிறாள்.

*திண்டுக்கல்-கோட்டை மாரியம்மனை பிரார்த்தித்து உப்பையும் மஞ்சளையும் கொடிமரத்தில் சமர்ப்பிக்க, வேண்டுதல் நிறை
வேறுகிறது.

*தஞ்சை-புன்னைநல்லூர் மாரியம்மன், துளஜா மன்னர் மகளின் கண் நோய் தீர்த்தவள். புற்றுருவாய் இருந்த இந்த அம்மனுக்கு யந்திரப் பிரதிஷ்டை  செய்தவர் நெரூர் சதாசிவப் பிரம்மேந்திரர்.

*காரைக்குடி, முத்துப்பட்டினம், மீனாட்சிபுரத்திலுள்ள முத்து மாரியம்மனுக்கு தக்காளிப் பழத்தை காணிக்கையாக்கி, தக்காளி பழச்சாறால் அபிஷேகம்  நடத்தப்படுகிறது.

*கோவை- உடுமலைப்பேட்டை மாரியம்மன் ஆலயத்தில், மார்கழி திருவாதிரையன்று 108 தம்பதியருக்கு மாங்கல்ய பூஜை செய்யப்பட்டு  சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படுகிறது.

* ஈரோடு- பெரிய மாரியம்மன், வெப்பநோய்களை நீக்குகிறாள். அம்மை நோய் கண்டவர்களை அன்னை குணப்படுத்துகிறாள்.

* கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் ஆலயத்தில் மண் சட்டியில் நெருப்பை ஏந்தி பூசாரி வருவதை தரிசித்தால் வாழ்வு வளம் பெறுவதாக  நம்பிக்கை நிலவுகிறது.

* ஈரோடு-கருங்கல்பாளையம், சின்ன மாரியம்மன் மழலை வரம் அருள்கிறாள். இத்தல விபூதி பிரசாதத்தை நெற்றியில் பூசியும் தண்ணீரில் கரைத்து  அருந்தவும் நோய்கள் நீங்குகின்றன

ஆடி வெள்ளி மகத்துவம்

ஆடி வெள்ளிக்கிழமை மகத்துவம்

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு சிறப்பு மகத்துவம் உள்ளது. ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக்காலமாக இதனைக் கருதுவர். ஆடி மாதத்தை ‘சக்தி மாதம்’ என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது.

ஆடி மாதம் – அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் இணைந்தால் அந்நாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. ஆடி மாதம் பண்டிகைகளை அழைக்கும் காலம்’ என்பர். மழைக்காலம் தொடங்குவதும் இப்பொழுதுதான். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபாடுவார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும். ஔவை நோன்பு: ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத்தக்கது.

மகாலட்சுமி வழிபாடு

ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அன்றையதினம் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும். ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. சண்டி ஹோமம்: ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் ‘நவசக்தி அர்ச்சனை’ நடைபெறும். ஆடி வெள்ளியில் ‘சண்டி ஹோமம்’ போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.

=========================================