நலம் பல தந்திடும் நவராத்திரி விரதம்
உலகெங்கும் நிறைந்து விளங்குகின்ற எல்லாம்வல்ல பரம்பொருளாகத் துலங்கும் சிவபெருமானுக்கு ஓர் இராத்திரி சிவராத்திரி ஆனால் அவரது சக்தியாக விளங்கும் அம்பிக்கைக்கு ஒன்பது இராத்திரிகள் அதுதான் நவராத்திரி.
இன்று ஆரம்பமாகின்ற இந்த நவராத்திரி விரதம் மிகவும் மகிமையும் மாண்பும் கொண்ட ஒரு விரதமாகும். நலம் பல தந்திடும் இந்த விரதம் இன்று முதல் ஒன்பது நாள்களுக்கு அனுஷ்டிக்கப்பெற்று பத்தாம் நாள் விஜயதசமிப் பெருநாளுடன் நிறைவுறும்.
நவராத்திரி ஒன்பது நாள்களுக்கும் ஆதிபராசக்தியான அம்பிகையை முதல் மூன்று நாள் துர்க்கா தேவிக்குரியதாகவும் அடுத்த நடு மூன்று நாள் இலட்சுமி தேவிக்குரியதாகவும் கடைசி மூன்று நாள் சரஸ்வதி தேவிக்குரியதாகவும் வழிபாடியற்றப்படுகின்றது.
இப்பரந்த நிலவுலகின் கண்ணே கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் இன்றியமையாதவையாகக் கருதப்படுகின்றன. இம் மூன்றும் மனித வாழ்க்கையின் முக்கிய தேவையாகும். சைவ சமயத்தை அனுஷ்டிக்கும் ஒவ்வொருவரும் இந்த மூன்றும் தங்களுக்கு நிறைவாகக் கிடைக்க வேண்டுமென்று விரதங் காத்து இந்த நவராத்திரி நாளில் வேண்டுதல் செய்வர்.
இதில் துர்க்காதேவி வீரத்துக்கும் இலட்சுமி தேவி செல்வத்துக்கும் சரஸ்வதி தேவி கல்விக்கும் அதி தேவதைகள் என்று நம்முன்னோர் வகுத்தபடி இந்த நவராத்திரியே அவர்களுக்குரிய விரதம் என்று கருதப்பட்டு காலங்காலமாக இது நடைமுறையிலிருந்து வருகிறது.
பொதுவாக இல்லற தர்மத்திலீடுபட்டு நல்லறஞ் செய்து வரும் குடும்பத்தினர் இந்த நவராத்திரியை வெகு விமரிசையாகக் கொண்டாடி அம்பிகையை நாளுந் தோத்தரித்து வணங்கி வழிபாடியற்றும் வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருகின்றது.
அத்துடன் பள்ளிக்கூடங்களிலும் தொழில் நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் பொது ஸ்தாபனங்களிலும் மற்றும் பிரதான இடங்களிலும் இந்த நவராத்திரியானது பிரதான இடத்தை வகிப்பதோடு கட்டாயம் செய்யவேண்டுமென்ற சம்பிரதாய பூர்வமான கோட்பாடுடைய முக்கிய நிகழ்வாகவும் இருந்து வருகின்றது. பத்தாம் நாள் விஜயதசமி ஆயுத பூஜைக்குரிய நன்னாளாகவும் விளங்குவதும் குறிப்பிடத்தக்கது.
நவராத்திரி விரதமானது அதிகமாகப் பெண்களால் அனுஷ்டிக்கப்படுகின்ற ஒரு விரதமாக விளங்குகின்றது. மேலும் இந்த நவராத்திரியில் வீடுகளிலும் கோயில்களிலும் பொம்மைகளை அழகழகாக அடுக்கி வைத்துக் கொலு அமைப்பதும் ஒரு வழக்கமாக இருந்து வருகின்றது. இந்த ஒன்பது நாள்களும் காலையில் எழுந்து புனித புண்ணிய நீராடி தோய்த்துலர்ந்த வஸ்திரந் தரித்துச் சந்தியாவந்தனம் முடித்து தேவி பாராயணம் செய்து அம்பிகையை வழிபடுவர்.
முதலில் துர்க்கை அம்மனை வீரம் வேண்டி மூன்று நாள் வழிபடுவர். பின்பு செல்வம் வேண்டி இலட்சுமிதேவியை நடு மூன்று நாளும் வணங்குவர். கடைசி மூன்று நாளும் கல்வியை வேண்டிச் சரஸ்வதியை வழிபாடியற்றுவர். முக்கியமாக நவராத்திரி என்றால் கலைமகள் என்றும் கலைவாணி என்றும் நாமகள் என்றும் போற்றப் பெறுகின்ற சரஸ்வதி பூஜையே நினைவுக்கு வரும். எல்லா வீடுகளிலும் எல்லாக் கோயில்களிலும் முக்கியமாக அம்மன் ஆலயங்களிலும் சகல இடங்களிலும் நிகழ்கின்ற சரஸ்வதி பூஜையானது மங்களகரமான இலட்சுமிகரமான சுபீட்சமான நல்வாழ்வு வேண்டியே நிகழ்த்தப்பெறுகின்றது.
இந்நவராத்திரி விழா பத்தாம் நாள் விஜயதசமி எனப்படும் வெற்றித் திருநாள். இது ஒரு மிக விசேடமான புனித புண்ணிய தினமாதலால் அன்றைய தினம் கல்வி கற்கத் தொடங்குகின்ற இளஞ் சிறார்களுக்கு வித்தியாரம்பம் செய்து வைக்கப்படும். பனை ஓலையிலே அ, ஆ, எழுதி அதை ஏடு துவக்குதல் என்ற கிரியை மூலம் அரிசியிலே எழுத்தெழுதி ஆரம்பித்து வைக்கின்ற மங்கள நிகழ்வு இந்த நாளில் தான் செய்யப்படுகின்றது.
அது மட்டுமன்றி சைவ ஆலங்களில் “மானம்பூ” என்று அழைக்கப்படுகின்ற வாழை வெட்டும் நிகழ்வும் இந்த விஜயதசமியிலேயே நிகழ்த்தப்பெறுகின்றது. அத்துடன் அம்பிகையானவள் மகிஷாசுரனை வதம் செய்தபடியால் அது வெற்றித் திருநாள் என அழைக்கப்படுவதுடன் பெரு விழாவாகவும் கொண்டாடப்படுகின்றது.
சைவ சமயிகளின் முக்கிய பிரதான விழாவாகக் கருதப்படுகின்ற நவராத்திரி விழா ‘தசரா’ எனவும் கூறப்படுகின்றது. அத்தகைய பெருமை மிக்க மகிமையுள்ள நவராத்திரியை சைவர்கள் ஒவ்வொருவரும் முறையாக அனுஷ்டித்து உலக வாழ்வில் சகல ஐசுவரியங்களும் கைவரப்பெற்று வாழ்வாங்கு வாழ அம்பிகையைப் பணிவோமாக