Cevvai
செவ்வாய்:
நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க, செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம், பராக்கிரமம், வீரதீர செயல்கள், அதிகாரம் செலுத்துதல், ஆளுமைத்திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நேர்மை, நியாயம் போன்ற பல தன்மைகள் கொண்ட கிரகம்.
போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, உயர் பதவிகள், சகோதர உறவுகள், மண், மனை, வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் போன்றவற்றுக்கான அதிபதி செவ்வாய். நம் உடலில் முக்கியமாக ரத்த சம்பந்தமான சில விஷயங்கள் சீராக இருக்க செவ்வாய் முக்கிய காரணம்.
போட்டி, பந்தயங்கள், உடல்திறன், சாகச நிகழ்ச்சிகள் போன்றவற்றில் புகழ்பெறவும் ரியல் எஸ்டேட், பில்டிங் கான்ட்ராக்ட், சிவில் இன்ஜினியரிங், அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள், நெருப்பு சம்பந்தமான தொழில்கள் சிறக்கவும் செவ்வாயின் அருள்கடாட்சம் அவசியம் தேவை.
அரசாங்க உயர் பதவிக்கு அனுகிரகம் செய்வதும் செவ்வாய்தான். தோற்றத்தில் கம்பீரம், நடையில் மிடுக்கு, குரலில் அதிகாரத்தை ஏற்படுத்தி தரக்கூடியவர். போட்டி, பந்தயங்களில், சாகச நிகழ்ச்சிகளில் புகழ்பெற செவ்வாயின் பலம் அவசியம் தேவை. ரத்த கிரகம் நம் உடலில் ரத்தத்திற்கும், வெப்பத்திற்கும் காரகமாக இருப்பவர் செவ்வாய். இவர் பலமாக இருந்தால்தான் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மூளைக்கு ஆற்றலும், சக்தியும் தரக்கூடிய கிரகம் செவ்வாய்.
பெண்கள் பூப்பெய்துவதற்கு முக்கிய காரண கர்த்தாவாக விளங்கக்கூடியவர். செவ்வாய் பலம் குறைந்தால் உடலில் ரத்த சம்பந்தமான நோய்கள் தோன்றும். குறைந்த ரத்த அழுத்தம், அதிக ரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடியவர். சகோதரகாரகன் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு காரகம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செவ்வாய்க்கு சகோதர காரகன் என்ற சிறப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருவருக்கு சகோதர, சகோதரிகள் உண்டா? அவர்களால் ஒருவருக்கொருவர் ஆதாயம் அனுகூலம் ஏற்படுமா? சகோதர பிரச்னைகள் உண்டாகுமா? பூர்வீக சொத்தில் உரிய பங்கு கிடைக்குமா என்பனவற்றை எல்லாம் தீர்மானிக்கக்கூடியவர் செவ்வாய்.
செவ்வாய் பூமிக்குக் காரகன். இவர் அருள் இருந்தால்தான் பூர்வீக சொத்துகள் நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் கைக்கு வந்து சேரும். சொந்தமாக வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட், பங்களா போன்றவை செவ்வாய் பகவானின் பரிபூரண தயவு இருந்தால்தான் நம்மால் பெறமுடியும். அதேபோல் ரியல் எஸ்டேட் என்ற நிலம் வாங்கி விற்கும் தொழில், கட்டிடத் தொழில், சிவில் இன்ஜினியரிங் போன்றவற்றில் புகழும், பணமும் குவியும்.
பிறந்த லக்னமும் செவ்வாயும் தரும் யோகம்
எந்த லக்னம் ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த வகையான யோகங்களைத் தருவார்?
மேஷ லக்னம் ராசி - தலைமை பதவி, அதிகாரம், ஆட்சி பீடம்.
ரிஷப லக்னம் ராசி - மனைவி வழியில் கூட்டுத் தொழில் மூலம் யோகம்.
கடக லக்னம் ராசி - தொழில், பூர்வ புண்ணிய அமைப்பு, குழந்தைகளால் செல்வாக்கு.
சிம்ம லக்னம் ராசி - நிலபுலன்கள், தந்தை வழியில் பூர்வீக சொத்து மூலம் கல்வி, செல்வம் மற்றும் வெளிநாட்டு தொடர்புகளால் யோகம்.
துலா லக்னம் ராசி - சொல்லாற்றல், மனைவி வகையில் யோகம்.
விருச்சிக லக்னம் ராசி - உயர்பதவி, ஆட்சி, அதிகாரத்தால் யோகம்.
தனுசு லக்னம் ராசி - பூர்வ புண்ணிய பலத்தின்படி யோகம், திடீர் அதிர்ஷ்டங்கள், பிள்ளைகளால் யோகம்.
மகர லக்னம் ராசி - தாய், தாய்வழி உறவுகளால் யோகம், நில புலன்கள், கல்வி செல்வத்தால் யோகம்.
மீன லக்னம் ராசி - பூர்வீக சொத்துகள், தந்தை வழியில் சொல்லாற்றல் மூலம் அதிர்ஷ்டம்.
மீதமுள்ள மிதுனம், கன்னி, கும்ப லக்னம் ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாயின் பலத்தை வைத்து யோகங்கள் கிடைக்கும். எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் செவ்வாய் நீச்சமாக 6, 8, 12 ஆகிய இடங்களில் இருக்க வேண்டும். அதேபோல 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேராமலும் இருக்க வேண்டும்.
செவ்வாயும் திருமணமும்
செவ்வாய்க்கும் திருமணத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. செவ்வாய் தோஷம் என்பது பரவலாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். செவ்வாய் தோஷம் பற்றி அச்சப்படும்படி பலவிதமான கருத்துகள் சொல்லப்பட்டாலும் அவை வெறும் வதந்திகள்தான்.
பழமையான ஜோதிட நூல்களில் செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தாமதமாகும் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12ல் இருந்தால் தோஷம் ஆகும். இப்படி தோஷம் உள்ள ஜாதகத்தை அதேபோன்று தோஷமுள்ள ஜாதகத்துடன் சேர்க்க வேண்டும். ஏதேனும் பரிகாரம் செய்து தோஷம் நிவர்த்தியாகி விட்டது என்பதற்காக முற்றிலும் தோஷம் இல்லாத ஜாதகத்துடன் சேர்க்கக்கூடாது.
செவ்வாயும் நல்ல நாளே
கிழமை என்ற சொல்லுக்கு உரிமை என்று பொருள். செவ்வாய் கிரகத்துக்கு உரிய நாள், செவ்வாய்க் கிழமை என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் என்ற சொல்லுக்கே மங்களம் என்றுதான் பொருள். கோயில்களில் முக்கிய பரிகார பூஜைகளை செவ்வாய்க் கிழமையில்தான் செய்வார்கள். ஆகையால் செவ்வாய்க் கிழமையை ஒதுக்கவேண்டிய அவசியம் அறவே இல்லை. நம் நாட்டில் தென்பகுதி, வடபகுதிகளில் மாறுபட்ட பழக்கவழக்கங்கள் உள்ளன. இங்கு நாம் செவ்வாய்க்கிழமையை காரணமே இல்லாமல் தவிர்க்கிறோம். வடநாட்டில் மங்கல நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன.
அவர்கள் செவ்வாயை “மங்கள்வார்” என்று குறிப்பிடுகின்றனர். இந்நாளில் சுபநிகழ்ச்சிகளைச் செய்தால், யோகத்தை விருத்தி செய்யும் என்று நம்புகின்றனர். செவ்வாய்க்கிழமை மற்றும் செவ்வாய் ஓரையில் செய்வதற்கென்றே சில சுபநிகழ்ச்சிகள் உள்ளன.
இந்த நாளில் சொத்துகள் வாங்குவது, விற்பது பற்றி பேசலாம். இடம், தோட்டம், நிலத்தைப் போய் பார்க்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். சகோதரர்களிடையே பிரச்னை இருந்தால் இந்நாளில் பேசித் தீர்க்கலாம். வேலையில் சேரலாம். பூமி பூஜை போடலாம். வீடு மாறலாம். புது வீட்டில் பால் காய்ச்சலாம். இந்நாளில் வாங்கிய கடனை அடைத்தால் மீண்டும் கடன்படாத நிலைமைக்குக்கூட வாய்ப்புண்டு. இந்த நாளில் முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபட்டால், நாளும், வினையும் நம்மை எதுவும் செய்யாது.செவ்வாய்க் கிழமையில் செய்கின்ற சுபநிகழ்ச்சிகள் நிலைத்து நின்று பலன் தரும்.
வழிபாடு - பரிகாரம்
செவ்வாய்க்குரிய கடவுள் முருகப்பெருமான். எல்லா முருகன் தலங்களும் செவ்வாய் பரிகாரத் தலங்களே. அறுபடை வீடுகளுக்கு சென்று முரு கப்பெருமானை வணங்குவதால் செவ்வாயால் உண்டாகும் பிரச்னைகள் விலகும். பழநியில் தண்டாயுதபாணி செவ்வாயாகவே அருள்பாலிக்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில், முக்கிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பும், பின்பும் இங்கு வந்து வழிபடுவது சிறப்பாகும். நவத் திருப்பதிகளில் திருக்கோளூர் செவ்வாய் தலமாகும். இத்தலத்தில் உள்ள பெருமாளை தரிசிப்பதால் சொத்துப் பிரச்னைகள் தீரும்.
தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ், முருகன் துதி பாடல்களை பாடி முருகனையும், செவ்வாய் எனப்படும் அங்காரகனையும் வணங்கி வழிபட்டால் புத்திர யோகம், பூமி பாக்யம் முதலான சகல யோகங்களும் வளங்களும் பெருகும்
No comments:
Post a Comment