வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Tuesday, June 19, 2018

செல் ஃபோன் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்.

செல் ஃபோன் அதிகமாய் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்.

எந்த ஒரு விஞ்ஞானக் கண்டு பிடிப்பிலும் நன்மையும் தீமையும் சரி விகிதம் கலந்தே இருக்கிறது. செல்ஃபோன் கலாச்சாரம் இன்று கொள்ளை நோய் போல எல்லா தரப்பு மக்களிடமும் பரவி இருக்கிறது. நிச்சயமாக இதில் நன்மைகள் நிறைய இருந்தாலும் அதன் தீமைகளையும் உணர்ந்திருப்பது நல்லது.

காற்றிலே கரையும் பணம்:செல்ஃபோன்கள் என்னவோ குறைந்த விலையில் கிடைத்தாலும் அதில் பேசுவதற்காக செலவழிக்கும் பணம் சாப்பிடுவதற்கு செலவழிப்பதை விட அதிகமாயிருக்கிறது.

முன்பெல்லாம் தூர இடங்களில் இருப்பவர்களுக்கு தந்தி மூலம் சுருக்கமாகத் தகவல் அனுப்புவார்கள். ஒரு போஸ்ட் கார்டில் சுருக்கமாக எழுதிப் போடுவார்கள். இன்று மொபைல் கால கட்டத்தில் தொலை பேசி ஒரு தகவல் சொல்ல உதவும் கருவி என்பது போய் ஓயாமல் பேச்சை ஒலிபரப்பும் கருவியாகி விட்டது. செல்ஃபோனை சுருக்கமாகத் தகவல் சொல்லப் பயன் படுத்துபவர்கள் எத்தனை பேர்? பலர் இன்று காற்றில் காசு கரைந்து போவது பற்றி கூட கவலைப் படாமல் குப்பைப் பேச்சுகளைத் தான் ஃபோனில் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் சரியாக உபயோகித்தால் இதைப் போல சக்தி வாய்ந்த பயனுள்ள சாதனமும் இல்லை தான்.

உடலைப் பாதிக்கிறது:செல்ஃபோனில் அதிகம் பேசுவது மூளை புற்றுநோய் ஏற்படுத்தும் என லண்டன் மருத்துவர் வினி குரானா தெரிவித்துள்ளார். ஆனால் செல்ஃபோன் பயன் படுத்துபவர் யாரும் அதன் ஆபத்தை இன்னும் உணரவில்லை. இன்னும் 10ஆண்டுகளில் இதனால் ஏற்படும் பாதிப்பை மக்கள் உணர்வார்கள். செல்ஃபோனில் இருந்து வெளீப்படும் மின் காந்த அலைகளால், பேசுபவர்கள் மூளையில் கட்டிகள் வரும். அது புற்று நோயாக மாறும். இதை குணப்படுத்துவது மிகவும் சிரமம். எனவே செல்ஃபோன் உபயோகத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

அரசும், செல்ஃபோன் நிறுவனங்களும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது சற்று பழைய தகவல்தான். இது போல நரம்பு தளர்ச்சி, கேட்கும் திறன் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.ஆனால் இந்த தகவல்கள் ஆதாரமற்றவை, அவை நிரூபிக்கப்படவில்லை என்று மாறுபட்ட தகவல்களும் வெளியாயின. இந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க டாக்டர்கள் இணைந்து ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் மொபைல் ஃபோன்களில் இருந்து வெளியாகும் கதிர்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இந்த கதிர் வீச்சு தூக்கத்தைப் பாதிக்கும். மூளையின் செல்களை இந்த கதிர்வீச்சு தூண்டி விடுவதால் மூளை விழிப்புடன் செயல்படும். இதனால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 35 ஆண்கள் மற்றும் 36 பெண்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டு நிரூபிக்கப் பட்டுள்ளது. இவர்கள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

பின்லாந்து நாட்டைச் சார்ந்த சேர்ந்த டாரியூஸ் லெஜின்ஸ்கி என்ற அறிஞர் செல்போன் பாதிப்பு பற்றி ஆய்வு முடிவாக அவர் கூறியதாவது: மொபைல் ஃபோன் கதிர்வீச்சுகள் மனிதர்களின் உடலில் ஒருசில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் சிறிய அளவிலானவை என்றபோதிலும், அவை நிகழ்கின்றன. இந்த ஆய்வில், 10 பேரை தொடர்ந்து ஒருமணிநேரம் ஜி.எஸ்.எம்., மொபைல்போன் உபயோகிக்கச் செய்தோம். பின்னர் அவர்கள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களின் முழங்கைப்பகுதி தோல்திசுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், உடலின் மற்ற தோல் பகுதிகளோடு ஒப்பிடுகையில் புரோட்டின் விகிதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வில் செல்போன் கதிர்வீச்சால் வேறு உடல் நல பாதிப்பு ஏற்படுவதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், தோல் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன,” என்றார். லண்டனில் வெளியாகும் பி.எம்.சி., என்ற பத்திரிக்கை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நேர விரயம்: அனேக இளைஞர்களும் . இளம் பெண்களும் செல்போன்களை நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்கில் செல்ஃபோன்களில் நண்பர்களுடனும் காதலனுடனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எஸ்.எம்.எஸ். அனுப்புவதிலும் அதை பார்ப்பதிலும் கூடுதல் நேரத்தை செலவிடு கிறார்கள்.

மனதைப் பாதிக்கிறது: ஸ்பெயின் நாட்டு கிரினேடா பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் 18 முதல் 25 வயதுக்கு உள்பட இளைஞர்களிடம் 10 ஆண்டுகளாக இது பற்றி ஒரு ஆய்வு நடத்தினார்கள் இதன் படி 40 சதவீத வாலிபர்கள் மற்றும் இளம் பெண்கள் தினம் 4 மணி நேரத்துக்கும் மேலாக செல்ஃபோனை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு உடலில் மேலோட்டமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவது அவர்களது மனதைப் பாதிக்கிறது. போதை மருந்து போல் செல்போன்களுக்கு இவர்கள் அடிமையாகி விடுகிறார்கள்.

மன உளைச்சல், விரக்தி, ஏமாற்றம், கோபம் போன்றவை அதிகரிக்கிறது. எஸ்.எம்.எஸ்., `மிஸ்டு கால்’ போன்றவற் றுக்கு பதில் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் பதட்டம் அதிகமாகிறது. சுவீடன் நாட்டில் 14 முதல் 20 வயதுக்குட்பட்ட 21 மாணவர்களிடம் செல் ஃபோன்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராயப்பட்டது இதில் செல் ஃபோன் அதிகம் பயன்படுத்தும் 20 மாணவர்கள் மனஅழுத்தம், ஆழ்ந்த தூக்கம் இன்மை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இவர்களால் படிப்பில் ஆழ்ந்த கவனம் செலுத்த முடியாததுடன் பொறுப்பில்லாமல் செயல்படும் மனபோக்கும் காணப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் அவர்களது உடல் நிலையையும் இது பாதிக்கும் என்பதும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பு: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிக அளவில் செல்ஃபோனை பயன்படுத்தினால் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 7 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் செல்போன்களை அடிக்கடி பயன்படுத்து அவர்களது உடல் நிலையைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கல்வியில் பாதிப்பு: செல்ஃபோனில் SMS அனுப்புவது பாட்டு சினிமா போன்ற மல்டிமீடியாப் பயன் பாட்டால் மாணவர்களது படிப்பில் கவனம் சிதறுகிறது. இதை உணர்ந்த தமிழக அரசு , பள்ளிக்கூடங்களில் செல் போன் தடை செய்திருப்பது நல்ல விஷயம் தான். ஆனாலும் பெற்றோர்களின் நான்கு கண்ணும் பிள்ளைகளிடம் தேவை.

கலாச்சாரப் பாதிப்பு: ` இன்று செல்ஃபோனுடன் காமிராவும் இணைந்து பல பாதிப்புகள் உண்டாக்குகிறது. பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் அனுமதியின்றி படம் எடுப்பது. அதை பலருக்கு அனுப்புவது , ஆபாசமாகப் படம் எடுப்பது மிரட்டுவது. ஆபாசப் படங்களை பரப்புவது. என பல செல் குற்றங்கள் தொடரத்தான் செய்கிறது. செல்ஃபோனில் பேசப்படும் எந்த பேச்சும் எதிரில் இருப்பவரால் என்னேரமும் பதிவு செய்யப்படலாம் . சில வேளை நமக்கு எதிராகக் கூடப் பயன் படுத்தப்படலாம். என்வே யோசித்து சுருக்கமாக பேசுவதே எப்போது நல்லது.

விபத்து : செல்ஃபோனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, சாலையை கடப்பது எவ்வளவு ஆபத்தானது என சொல்லத் தேவையில்லை. தினந்தோறும் பெருகிவரும் விபத்துக்களே சாட்சி. ஆய்வுகளும் இதை புள்ளி விபரங்களாகக் காட்டுகிறது.இஸ்திரி செய்து கொண்டிருக்கும் போது சமைத்துக் கொன்டிருக்கும் போது வரும் கால்களில் மூழ்கிப்போவது கருகி நாற்றம் வந்தாலும் தெரியாமல் போய்விடும். 

தகவல் திருட்டு: எல்லா இடங்களிலும் இப்போது செல்ஃபோன் கடைகள் நிறைந்துள்ளன. அங்கே செல் ஃபோனில் வீடியோ மற்றும் ரிங் டோன் ஏற்றுவதற்காக மொபைலை கொண்டு போய் கொடுக்கிறார்கள்.ஆனால் ஒரு கிளிக் செய்தால் உங்கள் ஃபோனில் உள்ள எல்லா தகவல்களும் அவர்கள் கம்ப்யூட்டருக்குப் போய் விடும்.அதில் உங்கள் ஃபோன் மெமரியில் உள்ள எல்லா கான்டாக்ட் நம்பர்கள், உங்கள் பெர்சனல் போட்டோக்கள்.குடும்ப அங்கத்தினர் ஃபோட்டோக்கள்.உங்கள் மெசேஜ் பாக்ஸில் உள்ள முக்கியத் தகவல்கள். வேறு சேமித்து வைக்கப்பட்ட முக்கிய எண்கள் பாஸ்வேர்டுகள் எல்லாம் காப்பி செய்யப்பட்டு விடலாம். முக்கியமாக உங்கள் செல் ஃபோனையோ சிம் கார்டையோ பிறர் உபயோகிக்க ஒரு போதும் கொடுக்காதீர்கள். பின்னால் வருத்தப்பட வேண்டியிருக்கும்.

செல்ஃபோனிலிருந்து வெளிப்படும் ஒலியின் அளவு அதிகம் உபயோகப் படுத்துபவர்களது காது பாதிப்படையச் செய்கிறது என்றும் காதுக்கு அருகே வைத்துப் பேசும்போது செல்ஃபோனிலிருந்து வெளிப்படும் அலைகள் மூளைக்கு செல்லும் மெல்லிய இரத்தக் குழாய்களை சேதப்படுத்துகிறது என்றும் ஒரு ஆராய்ச்சித் தகவல் இணையத்தில் வெளியாகியிருந்தது. எப்படியானாலும் இதுபற்றிய முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் தெரிய சிறிது காலம் எடுக்கலாம். அதுவரை செல்ஃபோனை தேவைக்கு மட்டும் பயன் படுத்துவது ஆரோக்கியத்துக்கும் பாக்கெட்டுக்கும் நல்லது

No comments:

Post a Comment