வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Tuesday, November 18, 2014

Welcome Tamilnadu Teachers Friendly Blog




Sent from Samsung Mobile



Welcome Tamilnadu Teachers Friendly Blog



பஸ்சில் இடம் பிடிக்கும் தகராறில் பள்ளி மாணவன் கழுத்து அறுப்பு சக மாணவர்கள் வெறிச்செயல்

Posted: 17 Nov 2014 06:49 PM PST

சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் தெற்கு தில்லை நகரைச் சேர்ந்தவர் கவியரசன் (14), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கெங்கவல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி பஸ்சில் செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல, அந்த பஸ்சில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருக்கையில் இடம் பிடிப்பது தொடர்பாக, சக மாணவர்கள் சிலருடன் கவியரசனுக்கு தகராறு ஏற்பட்டது.
பள்ளிக்கு வந்ததும், அனைவரும் வகுப்புகளுக்கு சென்று விட்டனர். காலை இடைவேளையின் போது, கவியரசன் கழிவறைக்கு சென்றார். அப்போது பஸ்சில் தகராறு செய்த மாணவர்கள் அங்கு வந்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆத்திரமடைந்த அவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த பிளேடால், கவியரசனின் கழுத்தை சரமாரியாக கிழித்தனர். இதில், படுகாயங்களுடன் மயங்கி விழுந்த மாணவரை, பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு, கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சின் இருக்கையில் இடம் பிடிப்பது தொடர்பான தகராறில், மாணவன் கழுத்தை சக மாணவர்களே பிளேடால் அறுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

50 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தக் கோரிக்கை

Posted: 17 Nov 2014 06:47 PM PST

சட்டப்பேரவையில் அறிவித்தவாறு 50 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாக விரைவில் தரம் உயர்த்த வேண்டும் என தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:
தமிழகம் முழுவதும் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிகழாண்டில் தரம் உயர்த்தப்படும் என்று 19.07.2014-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பள்ளிகள் தரம் உயர்த்தப்படவில்லை. தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் தொடர்பான அரசாணையை அக்.31-ஆம் தேதிக்குள் வெளியிடுவதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில் இந்த அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என்றார்.

அதிகரிக்கும் ஆங்கில மோகத்தால் அரசு தொடக்கப்பள்ளிகளில் குறைந்துவரும் மாணவர்கள்

Posted: 17 Nov 2014 06:46 PM PST

அதிகரித்து வரும் ஆங்கில மோகத்தால் அரசு தொடக்கப் பள்ளிகளில் போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாமல் குறைந்து வருகிறது. இதற்கு அடிப்படை காரணம் மக்களிடையே வளர்ந்து வரும் ஆங்கில மோகம் தான். அரசு பள்ளிகளில் உள்ளது போல் பரந்துவிரிந்த விளையாட்டு மைதானம், பெரிய விசாலமான வகுப்பறைகள், நல்ல காற்றோட்டமான சூழ்நிலை பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இல்லை. இருப்பினும் தற்போது உள்ள நிலையில் சாதாரண வேலை பார்ப்பவர்கள் கூட தனியார் மெட்ரிக் பள்ளிகளையே நாடி வருகின்றனர்.

அதே நேரம் இந்த பள்ளிகளில் பணியுரியும் ஆசிரியர்களில் 80 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். பெரும்பாலன அரசு தொடக்கப் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். ஒருசில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையும் உள்ளன. இரண்டு ஆசிரியர்களை வைத்து 1 முதல் 5ம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் நடத்துவார்கள் என பெற்றோர்கள் எண்ணுவதும் இத்தைகைய நிலைக்கு காரணமாக உள்ளது. ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் அதிகமாக இருந்தும் மாணவர்கள் இல்லாத நிலை உள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த கல்வியாளர்கள் சிலர் கூறுகையில். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்வழி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது குறைந்து கொண்டேவருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள செயல்வழிகற்றல் முறையால் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து உள்ளது. அதேபோல் ஒரு கி.மீக்கு இடையே மற்றொரு பள்ளி இருக்க கூடாது என அரசு ஆணை உள்ளது. இந்த விதி மீறப்பட்டு அரசு பள்ளிகளுக்கு அருகிலேயே தனியார் ஆங்கிபள்ளிகள் புற்றீசல் போல பெருகிவருகிறது. மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்வழியில் கற்கும் ஆர்வத்தை மாணவர்கள், பெற்றோர்களிடம் உருவாக்க வேண்டும். அரசு பள்ளிகளில் பணியுரியும் அனைத்து ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என உத்தரவு இடவேண்டும். மாணவர்களுக்கு சிறப்பு ஆங்கிலபயிற்சி அளிக்க வேண்டும். தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு உதவித் தொகை வழங்க வேண்டும் என்றனர்.

பிளஸ்–1 மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி பள்ளி கல்வித்துறை செயலாளர் த.சபீதா பேட்டி

Posted: 17 Nov 2014 06:44 PM PST

பிளஸ்–1 மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தலா 35 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. அதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ தேர்ச்சி என்று அறிவிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிளஸ்–1 தேர்ச்சி மதிப்பெண்ணில் வேறுபாடு
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. பிளஸ்–1 வகுப்பில் நன்றாக படித்தால் தான் பிளஸ்–1 தேர்ச்சி பெற்று பிளஸ்–2 படிக்க செல்லமுடியும்.
பிளஸ்–1 வகுப்பில் தேர்ச்சி பெற ஒவ்வொரு பள்ளியிலும் மாறுபட்ட மதிப்பெண் உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்களை கொண்ட தேர்வுக்குழு உள்ளது. அந்த தேர்வுக்கு குழு பரிந்துரைத்த மதிப்பெண்ணை கொண்டுதான் தேர்ச்சியா? தோல்வியா? என்பதை அந்த பள்ளி முடிவு செய்கிறது.
பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு அறிக்கை
குறிப்பாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்–2 தேர்ச்சி விகிதம் 100–க்கு 100 இருக்கவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பிளஸ்–1 தேர்ச்சி சதவீதத்தை அதிக அளவில் வைக்கிறார்கள்.
இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டு சீனியர் வக்கீல் டி.முத்தரசன் அரசுக்கு குறிப்பாக பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீத மதிப்பெண்ணை விட அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் அதிகமாக உள்ளது. அதுவும் பள்ளிக்கூடத்திற்கு பள்ளிக்கூடம் மாறுபடுகிறது.
அரசு குறிப்பாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆகியவற்றில் பிளஸ்–1 மாணவ–மாணவிகளுக்கு தேர்ச்சி பெற ஒரே வித மதிப்பெண்ணை நிர்ணயிக்க வேண்டும். இல்லையென்றால் வருடந்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பெயிலாகி விடுகிறார்கள். அதனால் அவர்கள் மனநலமும் பாதிக்கப்படுகிறது. மேலும் பிளஸ்–2 படிக்காமல் படிப்பை நிறுத்திவிட்டு வேறு வேலைக்கு சென்றுவிடும் நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளாக இருந்தாலும் சரி, அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருந்தாலும் சரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளாக இருந்தாலும் சரி எந்த பள்ளிகளாக இருந்தாலும் ஒவ்வொரு பாடத்திலும் 35 மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. இந்த மதிப்பெண் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு அமலில் உள்ளது.
35 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்த பள்ளிகளாக இருந்தாலும் சரி, தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் 35–க்கும் அதிகமாக நிர்ணயித்த பள்ளிகளாக இருந்தாலும் சரி அந்த பள்ளிகள் எந்த பள்ளிகள் என்று தெரிந்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு த.சபீதா தெரிவித்தார்.

TRB : ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் 25 பேர் விரைவில் நியமனம்

Posted: 17 Nov 2014 06:43 PM PST

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வேளாண்மை கல்வி கற்பிப்பதற்காக 25 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். அரசு உத்தரவுப்படி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா 25 பேர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் விபுநய்யரிடம் ஒப்படைத்துள்ளார்.

ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட உள்ளவர்கள் பி.எஸ்சி. வேளாண்மையுடன் பி.எட். படித்திருக்க வேண்டும் அல்லது பி.எஸ்சி.தோட்டக்கலையுடன் பி.எட். படித்திருக்க வேண்டும். எழுத்து தேர்வு எழுதவேண்டும். அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்கும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளி வர உள்ளது.

மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்லும் பள்ளி வேன்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தவேண்டும் போலீசார் கண்டிப்பான உத்தரவு

Posted: 17 Nov 2014 06:42 PM PST

சென்னையில் பள்ளிக்கூடங்களுக்கு மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்லும் வேன், பஸ் போன்ற வாகனங்களில் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த வேண்டும் என்று போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஆலோசனை கூட்டம்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது குறித்து, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நேற்று மாலை முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர்கள் அருண், ஸ்ரீதர் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள். சுமார் 400 பள்ளிகளின் சார்பில் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் போலீஸ் தரப்பில் கண்டிப்பான உத்தரவுகள், பிறப்பிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:–
ஜி.பி.எஸ். கருவிகள்
* பள்ளி வளாகத்திலும், பள்ளிக்கு வெளியே வாசலிலும் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். பொருத்தப்படும் கேமராக்கள், தெளிவாக படம் பிடிப்பனவாக இருக்க வேண்டும்.
* மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்லும் பள்ளி வேன்கள் மற்றும் பஸ்களில் பணியாற்றும் டிரைவர்கள், கிளீனர்கள் பற்றிய விவரங்களை புகைப்படத்துடன் சேகரித்து வைத்திருக்கவேண்டும். தனியாக வேன்களில் மாணவ–மாணவிகளை அனுப்பி வைக்கும் பெற்றோர், மேற்படி வேன்களின் டிரைவர்கள், கிளீனர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும்.
* பள்ளி வேன்–பஸ்களில் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவி பொருத்தி இருக்க வேண்டும்.
* மாணவ–மாணவிகளை பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பு, அந்தந்த பள்ளி நிர்வாகத்துக்கு உள்ளது. பெற்றோரும், தங்கள் குழந்தைகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பி வரும் வரை, உரிய கண்காணிப்புடன் இருக்க வேண்டும். மேற்கண்டவாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
வேகத்தடுப்புகள்
பள்ளிகள் செயல்படும் சாலைகளில், உரிய வேகத்தடைகளை அமைப்பது பற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தவும், ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அடுத்த மாதம் மீண்டும், இதுபோன்ற ஆலோசனை கூட்டத்தை நடத்திடவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கல்வித்துறை சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டும்: ஸ்மிருதி இரானி

Posted: 17 Nov 2014 06:41 PM PST

உயர் கல்வித்துறையில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்து வருவதாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

உயர் கல்வித் துறையில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்து வருகிறோம்.
கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டில் மாற்றம் கொண்டுவரவும், நாட்டில் கல்விக்கான செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் இந்த மறு ஆய்வு அவசியமாகும். கல்வித்துறை சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டும் என்றார் ஸ்மிருதி இரானி.
இதனிடையே, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராம்சங்கர் கட்டேரியா, உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்கள் துறையில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பின்பற்றிய கொள்கைள் மறுபரிசீலனை செய்யப்படும். தேவைப்பட்டால் அவற்றில் மாற்றம் செய்யப்படும்'' என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு பெருந்துறை நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது

Posted: 17 Nov 2014 08:29 AM PST



தகவல் : க. சாந்தகுமார், தலைமை நிலைய செயலாளர், சென்னை

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Posted: 17 Nov 2014 05:02 AM PST

குறைந்த பட்ச ஓய்வு ஊதியம் ரூபாய் 6,500 வழங்கிடவேண்டும். கோசியாரி கமிட்டி பரிந்துரைத்த ரூபாய் 3,000 அனைவருக்கும் இடைக்கால நிவாரணமாக வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் குவிக்க ஆலோசனை

Posted: 17 Nov 2014 02:10 AM PST


பாடங்களை புரிந்துகொண்டு, கவனத்துடன் படித்தால் பொதுத்தேர்வில் மதிப்பெண்களை குவிக்கலாம் என, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் அறிவுரை கூறினர்.


தினமலர் டி.வி.ஆர்., அகாடமி சார்பில், புதுச்சேரி லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த தினமலர் கல்விமலர் ஜெயித்துக்காட்டுவோம் கல்வித் திருவிழாவில், 10௦ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது குறித்து, மாணவர்களுக்கு, பாட வாரியாக ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.

பூங்குழலி பெருமாள் (தமிழ்)
பொதுத்தேர்வில் தமிழை முதல் தேர்வாக எழுதுகிறோம். தேர்வின்போது மாணவர்களுக்கு பயமும், பதற்றமும் வரக்கூடாது. சந்தோஷமான மனநிலையுடன் தேர்வை துவக்க வேண்டும். பதற்றம் ஏற்பட்டதால், பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கையெழுத்து நன்றாக இருந்தால் மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும்.

தேர்வில் இடைவெளி விட்டு எழுத வேண்டும். வாக்கிய பிழைகளை தவிர்க்க வேண்டும். விடைத்தாளில் வெளிப்பாடு நன்றாக இருந்தால் நிச்சயம் மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். ஒவ்வொரு மாணவர்களும் இஷ்டப்பட்டு படித்தால், அதிக மதிப்பெண் பெற முடியும். நமக்கு தெரியாமலேயே பிழைகள் ஏற்படலாம். படிப்பதுடன் தினமும், வீட்டில் எழுதிப்பார்ப்பது நல்லது. அடித்தல், திருத்தல் கூடாது. நம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் படித்தால், வெற்றி நிச்சயம்.

மரி கிளாடியஸ் பிலோமினா (ஆங்கிலம்)
ஆங்கில பாடம் கஷ்டமானது என நினைப்பது தவறு. மிகவும் எளிதான பாடம். விருப்பத்துடன் படித்தால், முழுமையான மதிப்பெண்களை பெற முடியும். தேர்வு எழுதுவதற்கு முன்பாக வினாத்தாளை ஒன்றுக்கு, இரண்டு முறை கவனமுடன் படித்துவிட்டு, பிறகு தேர்வு எழுத துவங்க வேண்டும். ஆங்கிலத்தை படிப்பதோடு மட்டுமில்லாமல், தினமும் எழுதி பார்க்க வேண்டும். முதல் தாளில் நாம் எளிதாக மதிப்பெண் பெற்றுவிடாலம். இரண்டாம் தாளில் அதிக கவனம் செலுத்தினோல் மட்டுமே, அதிக மதிப்பெண்களை பெற முடியும்.

வீரப்பன் (கணிதம்)
கணக்கு பாடம் மிக மிக ஈசியான பாடம். பொதுத்தேர்வில் நாம் சாதிக்க உதவும் பாடம் என்று கூட கூறலாம். இந்த பாடத்தில் சுலபமாக சென்டம் பெற்று விடலாம். கணக்கை புரிந்து கொண்டு, அடிக்கடி போட்டு பார்த்து பழக வேண்டும். நீச்சல், சைக்கிள், ஓவியம் கற்றுக்கொள்ள பயிற்சி தேவைப்படுவது போல், கணக்கு கற்றுக்கொள்ளவும், பயிற்சி முக்கியம்.
கணக்கு பாடத்தை பொறுத்த வரை பயம் இருக்கக்கூடாது. கணக்கு பாடத்தை கவனத்துடன் புரிந்து கொண்டு படித்தால், தவறு வராது. முழுமையான மதிப்பெண் கிடைத்துவிடும்.

பசுபதிராஜன் (அறிவியல்)
அறிவியல் பாடத்தை பொறுத்தவரை 55 மதிப்பெண்கள் வினாத்தாளிலேயே விடைகள் உள்ளது. வினாத்தாளை கவனமுடன் பார்க்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும், தேர்வில் அச்சம் இருக்கக்கூடாது. பதற்றம் ஏற்பட்டு, மதிப்பெண்ணை இழந்து விடக்கூடாது. ஆர்வமுடன் படித்தால், முழு மதிப்பெண் பெறலாம். கையெழுத்து மிக முக்கியம். மாணவர்களின் எழுத்து தெளிவாகவும், புரியும் படியும் இருக்க வேண்டும். அப்போது தான் முழு மதிப்பெண் பெற முடியும்.

பாலு(சமூக அறிவியல்)
சமூக அறிவியல் பாடம் எளிமையானது, மற்ற பாடங்களை போன்று அதிக சிரத்தை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாடத்தை புரிந்து கொண்டு படித்தால், ஈசியாக அதிக மதிப்பெண்களை பெற்றுவிடலாம். சமூக அறிவியல் பாட தேர்வை, சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுத வேண்டும். தலைப்பு போட்டு எழுத வேண்டும். அப்போதுதான், திருத்துவோருக்கும் வசதியாக இருப்பதுடன், முழுமையான மதிப்பெண்களை பெற முடியும். தேர்வுக்கு முன்பு, பாடத்தை முழுமையாக படித்துவிட்டு, அடிக்கடி ரிவிஷன் பார்ப்பது நல்லது.

பள்ளி மாணவன் இறப்பு எதிரொலி: ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மறியல்

Posted: 16 Nov 2014 09:17 PM PST


பள்ளி மாணவன் இறந்த வழக்கில் வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இறந்த மாணவரின் உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டதால் நிலக்கோட்டையில் பதட்டம் ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 11 ம் வகுப்பு மாணவர் சக மாணவர் அடித்ததால் இறந்தார்.
விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட மாணவரை கைது செய்தனர். கொலை சம்பவத்தையடுத்து பள்ளிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இறந்த வினோத்தின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டவர்கள் நிலக்கோட்டை நால்ரோட்டில் நேற்று காலை ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறந்த மாணவனின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பள்ளி தலைமையாசிரியர், வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். டி.எஸ்.பி., கருப்பசாமி, தாசில்தார் மோகன், இன்ஸ்பெக்டர் சுரேஷ், எத்திலோடு ஊராட்சி மன்ற தலைவர் வீரமணிராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தாலுகா அலுவலகம் சென்று கோரிக்கையை மனுவாக எழுதி தாசில்தாரிடம் கொடுத்து கலைந்து சென்றனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் நிலக்கோட்டையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு

Posted: 16 Nov 2014 09:16 PM PST


மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தவது சார்பான கடிதத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மதிப்புமிகு நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டிய கடித நகல்...

அன்பார்ந்த ஆசிரியர்களே சங்கம் பாகு இல்லாமல் கீழ் கண்ட 2 
மனுக்களையும் மாண்புமிகு முதலமைச்சர் தனி பிரிவுக்கும் , நிதித்துறை செயலாளர் அவர்களுக்கும் அனைவரும் அனுப்பிடுவோம் ,இதில் அனுப்புனர் பகுதியில் தங்களது முகவரியை எழுதி இறுதில் கையொப்பம் செய்து ரூ 5 கவர் வங்கி அனுப்பிடுவோம்,.
நமது பாதிப்பு நீங்கிட ரூ 10 செலவு செய்து 2 மனுக்களையும் அனைவரும் அனுப்பிடுவோம். இதன் மூலம் நமது ஊதிய பாதிப்பை நீக்கிட நமது கோரிக்கையை அழுத்தமாய் பதிவு செய்திடுவோம் .
நாம் மட்டும் அல்லாது நமது ஆசிரிய நண்பர்கள் , ஆசிரியர் பயிற்சி பள்ளி தோழர்கள் மற்றும் ஆசிரிய உறவினர்கள் மூலமாகவும் 2 மனுக்களையும் அனைவரும் அனுப்பிடுவோம் - மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் ;- கிப்சன் -டாட்டா பொது செயலாளர் 9443464081.

மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்கு 113 அம்சங்கள்:மாநில அரசு உத்தரவில் சட்ட வரைவு வெளியீடு

Posted: 16 Nov 2014 09:07 PM PST


பள்ளி, கல்லுாரிகளில் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 113 அம்சங்கள் அடங்கிய விதிமுறைகளை அமல்படுத்த, கர்நாடக மாநில அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான சட்டவரைவு வெளியிடப்பட்டுள்ளது.


பள்ளி, கல்லுாரிகளில், மாணவ, மாணவியரின் ஆரோக்கியம், அடிப்படை வசதிகள், தனிப்பட்ட பாதுகாப்பு, போக்கு வரத்து வசதி உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் தொடர்பாக, 113 விதிமுறைகளை வகுத்துள்ள கல்வித்துறை, அதற்கான வரைவு பிரதியை வெளியிட்டுள்ளது.

கருத்துக்கள்:இந்த விதிமுறைகள் குறித்து, வரும், 25ம் தேதிக்குள் ஆலோசனைகள், கருத்துக்களை தெரிவிக்கும்படி பெற்றோர், கல்வி வல்லுனர்கள், கல்வி நிறுவனங்களிடம் கேட்டுள்ளது.சமீபத்தில், பள்ளி, கல்லுாரி மாணவியர் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களுக்குப் பின், மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக, கர்நாடக அரசு வழி
காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

இதை தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அலுவலகமும் விதிமுறைகளை வெளியிட்டது. இத்தனைக்கு பின்னரும், பெங்களூருவில், சிறுமியர் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் குறையவில்லை.

இதை தீவிரமாக எடுத்துக்கொண்ட அரசு, முதன் முறையாக பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக,சட்ட விதிமுறை களை அமல்படுத்த முன்வந்துள்ளது. இதன் மூலம், கல்வி நிறுவனங்களுக்கு சட்டத்தினாலேயே, கடிவாளம் போட அரசு முன் வந்துள்ளது. சட்ட விதிமுறை, 3 பகுதிகளை கொண்டுள்ளது. 71 பக்கம் கொண்ட, சட்ட வரைவு கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் பகுதியில், பள்ளி, ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பெற்றோர், மாணவர்களின் பொறுப்பு பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அடிப்படை வசதிகள்:அடுத்த பகுதியில், பாதுகாப்பு நடவடிக்கைகள், அதை செயல்படுத்துவது தொடர்பாக விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி பகுதியில், பள்ளிகளில் கட்டாயமாக தேவைப்படும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மற்ற அம்சங்கள் குறித்து விரிவாக தெரிவிக்கப் பட்டுள்ளது.கல்வித்துறை குறிப்பிட்டுள்ள, 113 அம்சங்களில், 94 அம்சங்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டுமென்றும், சட்ட வரைவில் உத்தரவிடப்பட்டுள்ளது.


குழந்தை தொழிலாளர்கள் தடை சட்டம், குழந்தைகள் நியாய சட்டம், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், கல்வி உரிமை சட்டம், போஸ்கோ சட்டம், ஐ.நா., சபையின் வழிகாட்டுதலின்படியும், இந்த சட்ட வரைவு அமைக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை மற்றும் சட்டதுறையின் வல்லுனர்கள் ஒருங்கிணைந்து, இந்த சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

வேலை கிடைப்பதில் தாமதமானாலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது

Posted: 16 Nov 2014 08:59 PM PST


சிலருக்கு முதல் நேர்முகத் தேர்விலேயே வெற்றி கிடைத்து விடும். சிலருக்கு ஐந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட பின்பும், வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இத்தகைய மாணவர்கள் எந்த நேரத்தில் தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள்.


மேலும் எதிர்மறை எண்ணங்களை ஒருபோதும் உங்கள் மனதில் ஏற்றாதீர்கள். இது உங்களது வாழ்க்கையை தாழ்வு நிலைக்கு அழைத்து சென்றுவிடும். படிப்பை முடித்தவுடன் வேலை தேடும் காலம் என்பது அனைவருக்கும், அவர்களது வாழ்க்கையில் முக்கியமான தருணமாக இருக்கும்.

என்ன செய்யலாம்?

* முதலில் நீங்கள் பட்டப்படிப்பை முடித்ததை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

* உங்களுக்கு எது நல்ல வேலை என முடிவு செய்யுங்கள். நல்ல வேலை எனில், சம்பளம், அத்துறையில் உங்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு, அவ்வேலையில் உள்ள சவால் ஆகியவை நீங்கள் தேடும் வேலையில் இருக்கிறதா? என பார்க்கலாம்.

* உங்களது சீனியர், நண்பர்கள் அல்லது உறவினர்களிடம், அவர்கள் எப்படி வேலை தேடினார்கள் என்பது பற்றி, அவர்களுடைய அனுபவங்களை கேட்கலாம். அதற்காக அவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அவர்களிடமிருந்து ஆலோசனைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

* உங்களது படிப்புக்கேற்ற இன்டர்வியூ, எங்கு நடந்தாலும் அங்கு சென்று கலந்து கொள்ளுங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இன்டர்வியூக்களில் கலந்து கொள்ளும்போதுதான், இன்டர்வியூ பற்றிய பயம் போகும். ஒருவேளை நீங்கள் இன்டர்வியூவில் வெற்றி பெறலாம். ஆனால் இன்டர்வியூவில் பங்கேற்கும்போது, வேலை பெறுவது மட்டும்தான் முக்கிய இலக்கு என பார்க்காதீர்கள்.

* நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது குறித்து, உங்களை நீங்களே அன்பு செலுத்துங்கள். வேலை தேடும் தருணத்தில் ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள், தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி உங்கள் பக்கம்.

தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் அரசு வேலை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Posted: 16 Nov 2014 08:48 PM PST


தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவர் என்ற, தமிழக அரசின் உத்தரவு சரியானதே என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களை விட, அரசு நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு, பணி நியமனத்தின்போது, முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

சம அளவில்

கடந்த 2012ல், தமிழக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், அரசு நர்சிங் கல்லூரிகளில் படித்த மாணவியரும், தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்த மாணவியரும், சம அளவில், அரசுப் பணி நியமனம் பெற வழிவகை செய்யப்பட்டது.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு நர்சிங் கல்லூரி மாணவியர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, செவிலியர்களை நியமனம் செய்யும்போது, அரசு நர்சிங் கல்லூரிகளில் படித்த மாணவியருக்கு மட்டுமே, முன்னுரிமை வழங்கினால், அது, மற்ற துறைகளின் நியமனங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

குழப்பம் ஏற்படும்

நர்சிங் மாணவியர் கேட்பதுபோல, அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்கள், தங்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் வேலை தர வேண்டும் என்றும், அரசு சட்டக் கல்லூரியில் படித்தவர்கள், தாங்கள் மட்டுமே நீதிபதியாக வேண்டும் என்றும் கேட்க ஆரம்பித்தால், குழப்பம்தான் ஏற்படும். அரசு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தர ஆரம்பித்தால், தனியார் கல்லூரிகளில் படித்தவர்கள் எல்லாம், வேலைவாய்ப்புக்கு எங்கே போவது என்ற நிலையும் உருவாகும்.

எனவே, அரசு மருத்துவமனைகளுக்கான செவிலியர் பணி நியமனங்களின்போது, அரசு நர்சிங் கல்லூரிகளின் மாணவியருக்கே, முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லூரிகள் என, இரண்டையும் சமமாகவே கருத முடியும். அரசு பணி நியமனங்களின்போது, இரு தரப்பினருக்கும், சமமான வாய்ப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிரமப்பட்டு பயிற்சி பெறுகின்றனர்

வழக்கு விசாரணையின்போது, அரசு நர்சிங் கல்லூரி மாணவியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்த வாதம்: தனியார் கல்லூரிகளில், எளிதாக இடம் கிடைத்து விடுகிறது. ஆனால், அரசு நர்சிங் கல்லூரிகளில், விதிமுறைகளுக்கு உட்பட்டு இடம்பெற்று, மிகுந்த சிரமப்பட்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், அரசு நர்சிங் கல்லூரிகளில் படிப்பவர்களே, அரசு மருத்துவமனைகளுக்கு அதிகம் சென்று பணிபுரிகின்றனர்.

அதனால், அதிக அளவில் பயிற்சி பெற்று, கூடுதல் தகுதிகளுடன் இருக்கின்றனர். நர்சிங் பயிற்சியின்போதே, அரசுக்காக வேலை செய்து, அரசோடு சேர்ந்து செயல்படுகின்றனர். எனவே, அரசு பணி நியமனங்களின்போது, அரசு நர்சிங் கல்லூரி மாணவியருக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

பிளஸ் 1 தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயத்தில் பள்ளிகளுக்கிடையே அதிக முரண்பாடு

Posted: 16 Nov 2014 08:46 PM PST


பிளஸ் 1 தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயத்தில், பள்ளிகளுக்கிடையே, அதிக முரண்பாடு இருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகி உள்ளது. அரசு பள்ளிகளில், பாடத்திற்கு 10 மதிப்பெண் வீதம் வாங்கினால், பிளஸ் 1 பாஸ் எனும் நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், 40 முதல் 60 மதிப்பெண் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


பிளஸ் 1 வகுப்பில், பொதுவாக மாணவர்களை, அதிகளவில் தோல்வி அடைய செய்வதில்லை. வருகைப் பதிவேடு மற்றும் பாடங்களில், ஓரளவிற்கு மதிப்பெண் பெற்றிருந்தால், பாஸ் போட்டு விடுகின்றனர். இந்த நிலை, அரசு பள்ளிகளிலும், மெட்ரிக் பள்ளிகளிலும் மட்டுமே காணப்படுகின்றன. அரசு உதவிபெறும் பள்ளிகளில், பாடத்திற்கு 40; 50; 60 மதிப்பெண் என நிர்ணயித்து, மாணவர்களை, அதிகளவில், தோல்வி அடையச் செய்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலத்திற்கு வந்துள்ளது.

பிளஸ் 1 வகுப்பில், மாணவர் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை, அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில், பள்ளி கல்வித்துறை, எந்த அளவுகோலையும் நிர்ணயிக்கவில்லை. மாறாக, அந்தந்த பள்ளி ஆசிரியர் குழுவே, தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை நிர்ணயிக்கிறது. அரசு உதவிபெறும் பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சியில் குறை வந்துவிடக்கூடாது என்பதற்காக, சுமாராக படிக்கக்கூடிய மாணவர்களை, பிளஸ் 1 வகுப்பிலேயே வடிகட்டுவது, தற்போது தெரிய வந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர், முத்தரசன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் வெவ்வேறு வகையான மதிப்பெண் நிலவரத்தை அறிந்துள்ளார்.

அவர் கூறியதாவது: சென்னை, ஷெனாய் நகரில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2012 13ம் கல்வி ஆண்டில், பிளஸ் 1 தேர்ச்சிக்கு, ஆங்கிலம், இயற்பியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கு, தலா 10 மதிப்பெண் நிர்ணயித்துள்ளனர். கணிதம், வணிகவியல் போன்ற பாடங்களுக்கு, 15 மதிப்பெண் என நிர்ணயித்துள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள, வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில், தலா 40 மதிப்பெண் என்றும், வில்லிவாக்கம், சிங்காரம்பிள்ளை மேல்நிலைப் பள்ளியில், தலா, 60 மதிப்பெண் என்றும் நிர்ணயித்துள்ளனர்.

அரசு பள்ளிகளில், 10 மதிப்பெண் முதல் 15 மதிப்பெண் வரைதான் உள்ளது. உதவிபெறும் பள்ளிகளில் மட்டும், 40 மதிப்பெண், 60 மதிப்பெண் என நிர்ணயிப்பது, எந்த வகையில் நியாயம். உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களை, அதிகளவில் பெயில் ஆக்குகின்றனர். கல்வித்துறை, அனைத்து வகை பள்ளிகளுக்கும், ஒரே வகை மதிப்பெண்ணை, தேர்ச்சிக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு, முத்தரசன் கூறினார்.

கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், "இந்த பிரச்னை, செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் சரி செய்யப்படும். அனைத்து வகை பள்ளிகளுக்கும், பிளஸ் 1 தேர்ச்சிக்கு, சரிசமமான மதிப்பெண் நிர்ணயம் செய்யப்படும் என தெரிவித்தது.

No comments:

Post a Comment