வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Tuesday, October 21, 2014

Educational news

---------- Forwarded message ----------
From: "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog" <noreply@blogger.com>
Date: 19 Oct 2014 07:33
Subject: Welcome Tamilnadu Teachers Friendly Blog
To: <vadivelan56@gmail.com>
Cc:

Welcome Tamilnadu Teachers Friendly Blog


வெயிட்டேஜ் முறையின் குறைபாடுகளை அரசுக்கு எடுத்துரைக்க ஆசிரியர் சங்கங்கள் முன்வர வேண்டும்; ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்

Posted: 18 Oct 2014 12:49 AM PDT

ஒரு காட்டில் ஒரு பசு தனியாக மேய்ந்து கொண்டிருந்தது அந்த வழியாக வந்த கொடூர சிங்கம் பசுவின் மீது பாய்ந்தது, பசுவோ தன் உயிரை காக்க 30நிமிடம் போராடியது இறுதியில் பசுவை கடித்து கொன்று சாப்பிட்டது. மேலும் அந்த கொடூர சிங்கம் வேட்டையாட சென்றது அருகில் பத்து பசுக்கள் மேய்ந்தும் அதில் ஒன்று மட்டும் தனியே மேய்ந்து கொண்டிருந்தது..அதனை குறி வைத்து சிங்கம் பாய்ந்தது இதனை பார்த்து மற்ற பசுக்கள் தன் இனத்தை காக்க ஒன்று சேர்ந்து தனது கொம்பால் முட்டி சிங்கத்தை கொன்றது.

பார்த்தீர்களா ஆசிரியர் சொந்தங்களே!!  ஒரு விலங்கு கூட தன் இனம் அழியாமல் இருக்க ஒன்று சேர்கிறது.


எந்தருமை ஆசிரியர் சொந்தங்களே இதை கதையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எங்கள் கதறலாக, கண்ணீராக எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டனி,தமிழக தமிழாசிரியர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், என சுமார் 40 சங்களின் செயல்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் பாராட்டுவதற்குரியது...

உங்க்ளைபோன்ற சங்களின் ஒருமித்த, உரத்த குரலினால் போராடியும், நீதிமன்றம் வாயிலாகவும் பல சாதனைகள் செய்துள்ளீர்கள் என்பது உண்மை உண்மை,மேலும் ஆசிரியர்களுக்கு தேவையான விடுப்புகள், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, உரிமைகளுக்கக பல போராட்டங்களை முன்னிறுத்தி வெற்றி கண்டுள்ளீர்கள் அதற்காக அனைத்து ஆசிரியர் கூட்டனி மற்றுன் சங்கங்களை மனதார பாராட்டுகிறேன்..

ஆகவே தற்போது ஆசிரியர் என்ற இனத்தை அழித்து வரும் வெய்ட்டேஜ் என்ற கொடூர சிங்கத்தை வீழ்த்த அனைத்து ஆசிரியர் சங்கங்களும் முன்வர வேண்டும்,அறிக்கை, தீர்மானம் மற்றும் அரசுக்கு பரிந்துரைக்க முன்வர வேண்டும் என ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பு தாழ்மையோடு  கேட்டுக்கொள்கிறது.

Article: P.Rajalingam Puliangudi

Income Tax Slabs & Rates for Assessment Year 2015-16

Posted: 18 Oct 2014 12:52 AM PDT

Income Slabs Tax Rates

i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL

ii. Where the total income exceeds Rs. 2,50,000/- but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which the total income exceeds Rs. 2,50,000/-.Less ( in case of Resident Individuals only ) : Tax Credit u/s 87A - 10% of taxable income upto a maximum of Rs. 2000/-.

iii. Where the total income exceeds Rs. 5,00,000/- but does not exceed Rs. 10,00,000/-. Rs. 25,000/- + 20% of the amount by which the total income exceeds Rs. 5,00,000/-.

iv. Where the total income exceeds Rs. 10,00,000/-. Rs. 125,000/- + 30% of the amount by which the total income exceeds Rs. 10,00,000/-.

2014-15 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வருமான வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக (ரூ.50,000) உயர்த்தப்பட்டது.

வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.


சொந்த வீட்டில் குடியிருப்பவர் பெறும் வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு அளிக்கப்படும் விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டது.

மாணவியரின் உயர்கல்விக்கு 'உதான்' புதிய திட்டம் : மத்திய அரசு பள்ளிகளில் பயிற்சி

Posted: 18 Oct 2014 12:37 AM PDT

மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,க்களில் சேருவதற்கு புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு, ஜெ.இ.இ.இ., என்ற தேர்வை எழுத வேண்டும். இதற்காக, மத்திய அரசின் பாடத்திட்டம் செயல்படுத்தும் கேந்திரிய பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு 'உதான்' என்ற அமைப்பின் திட்டம் இதற்காக செயல்படுத்தப்பட உள்ளது. இதில் மேல்நிலையில் படிக்கும் சிறந்த மாணவிகள் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அவர்களுக்கு ஆன்-லைன் அல்லது நேரடியாக சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கும். பயிற்சி புத்தகம், டேப்லெட் இலவசமாக வழங்கப்படும். சந்தேகங்களை தெளிவுபடுத்த 'ஹெல்ப் லைன்' வசதியும் ஏற்படுத்தப்படும்.
ஜெ.இ.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிப்பது முதல் தேர்வு எழுதுவது வரை வழிகாட்டுதல் தொடரும். பயிற்சிக்கு 50 சதவீதம் பேர் எஸ்.சி.எஸ்.டி., பிரிவில் இருந்து தேர்வு செய்யப்படுவர். மேல்நிலையில் கணிதம், அறிவியல் பிரிவு மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.
பிளஸ் 1ல் படிக்கும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பில் 70 சதவீத மதிப்பெண்ணுடன், கணிதம், அறிவியலில் 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 மாணவர்களை பொறுத்தவரை, மேற்கண்ட தகுதியுடன், பிளஸ் 1ல் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஏழை மாணவியருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மாநில பாடத்திட்ட மாணவிகளும் பங்கேற்கலாம். தகுதியுள்ளவர்கள் அக்.,27 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் முத்தையா கூறுகையில், ''உதான் திட்டம் குறித்த சுற்றறிக்கை சமீபத்தில் வந்துள்ளது. மாணவர்களுக்கு தெரிவித்துள்ளோம். பெற்றோர் இதுகுறித்து அறிந்து விண்ணப்பிக்கலாம்,'' என்றார்.

10ம்வகுப்பு, பிளஸ் 2 காலாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பயிற்சி : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Posted: 18 Oct 2014 12:37 AM PDT

காலாண்டுத்தேர்வில் 10ம்வகுப்பு, பிளஸ் 2 வில் பாடவாரியாக தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பொதுத்தேர்வில் பள்ளிவாரியாக தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிகல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக சமீபத்தில் முடிந்த அவ்வகுப்புகளுக்கான காலாண்டுத்தேர்வுகளில் பாடவாரியாக தேர்ச்சி பெறாத அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,"எந்தெந்த பாடங்களில் அதிக மாணவர்கள் தோல்வியடைந்தனர். அதற்கான காரணம் என்ன என கண்டறிந்து, அவர்களை அடுத்துவரும் அரையாண்டுத்தேர்வு, பின்னர் இறுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற வைப்பதற்கான வழிமுறைகளை வகுக்க மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முக்கிய வினா விடை அடங்கிய கையேடு தயாரித்து வழங்கப்பட்டு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதுபோல் பாட ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்கப்படும்,"என்றார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பிற்காக காத்திருக்கும்...

Posted: 17 Oct 2014 08:48 PM PDT

இந்தாண்டு நிறைவடைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகததால், தேர்விற்காக காத்திருப்பவர்களும், குறிப்பாக தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டது முதல் அது சந்தித்து வரும் சிக்கல்களின் எண்ணிக்கை எண்ணற்றதாக உள்ளது. நடத்தப்பட்ட தகுதித் தேர்விலும், அதற்கு பிறகான பணி நியமனத்திலும் தாமதங்கள் ஏற்பட்டு வந்த நிலையில்,இந்தாண்டிற்கான அறிவிப்பே இன்னும் வெளியாகாமல் உள்ளது.


2010-ல் அறிவிக்கப்பட்ட இந்த தகுதித் தேர்வு முறை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உடனடியாக அமல்படுத்தப்பட்டு தனியார் பள்ளிகளில் பணிபுரிபவர்களுக்கு ஐந்தாண்டுகள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.2015-ம் ஆண்டோடு அந்த அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் இந்தாண்டிற்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய கட்டாயம் பல தேர்வர்களுக்கு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வரும் இத்தேர்வு அறிவிக்கப்படாததற்கு,அதிக அளவில் தொடரப்படும் வழக்குகளும் காரணமாக கூறப்படுகிறது. 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்விற்கும் அது சார்ந்த பிரச்னைகளுக்காகவும் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழக அரசு ஏராளமான வழக்குகளை சந்தித்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.ஆனால், இப்போது நடைபெற்று வரும் வழக்குகள் தேர்வு சார்ந்ததல்ல என்றும் நியமனம் தொடர்பாகவே இருக்கும்பட்சத்தில் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் தேர்வை நடத்தியிருக்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள். வழக்குகள் தவிர பல்வேறு போராட்டங்களும் நடந்த வண்ணம் உள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியத் தரப்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான விளக்கம் எதுவும் அளிப்படவில்லை. எனினும், அடுத்த மாதத்திற்குள் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தலைமுறை தொலைக்காட்சி

நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்த பிறகே தகுதித்தேர்வை நடத்துவது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு?

Posted: 17 Oct 2014 08:46 PM PDT

ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதித் தேர்வுகளை நடத்தும் போதெல்லாம் நீதிமன்ற வழக்குகளை சந்திக்க வேண்டியுள்ளதால்,இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வை நடத்துவதில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, 2011ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவித்தது.இதுவரை 3 தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. தொடக்கத்தில் நடந்த தகுதித் தேர்வில்போதிய ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாத காரணத்தால் 2011ம் ஆண்டில் 2 முறை தேர்வுகள் நடத்தப்பட்டது. இதையும் சேர்த்தால் 4 தேர்வுகள் வரை நடந்துள்ளது.

ஒவ்வொரு முறை தகுதித் தேர்வு நடந்து முடிந்ததும், கீ&ஆன்சர் வெளியான நாளில் இருந்தே தேர்வு எழுதியோர் தரப்பில் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்துள்ளனர்.அந்தவழக்குகளை முடித்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஆசிரியர் தேர்வு வாரியம் பல பிரச்னைகளை சந்தித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. இந்த முறையை எதிர்த்து பலர்

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்,வெயிட்டேஜ்முறையை ரத்து செய்து விட்டு பாதிப்பில்லாத வகையில் புதிய அணுகுமுறையுடன் கூடிய வெயிட்டேஜ்முறையை கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, பணி நியமனத்துக்கு 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டது, இதற்காக பலர் மீண்டும் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தனர். இப்படி பல பிரச்னை களை கடந்து வந்த நிலை யில் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடக்க வேண்டியதகுதித் தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்த பிறகே தகுதித்தேர்வை நடத்துவது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதனால் இப்போதைக்கு தகுதித் தேர்வு நடக்காது என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளிக்கு முன்னதாக பள்ளிகளுக்கு விடுமுறை: பெற்றோர் எதிர்பார்ப்பு

Posted: 17 Oct 2014 08:44 PM PDT

'நகர பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால், பள்ளிகளுக்கு தீபாவளிக்கு ஓரிரு நாள் முன்னதாக, விடுமுறை அளிக்க வேண்டும்' என பெற்றோர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.வரும் 22ல், தீபாவளி கொண்டாடப்படுகிறது; அன்று ஒருநாள் மட்டும், பள்ளிகளுக்கு அரசு விடுமுறையாக உள்ளது.

போக்குவரத்து மிகுந்த இடங்களில், ரோட்டை கடக்கவும், நெரிசலான பஸ்களில் பயணிக்கவும் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். எனவே, 'வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில், நகர பகுதிக்குள் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து, தீபாவளிக்கு பிறகு வரும் அரசு விடுமுறை நாளில், பள்ளியை பணி நாளாக செயல்படுத்த வேண்டும்' என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. வெளியூர் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகமுள்ள திருப்பூரில், தொழிலாளர்கள் பலரும் குடும்பத்துடன், தங்களது சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட செல்வது வழக்கம்.
சனி, ஞாயிறுகளில் அவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதால், பெரும்பாலான மாணவர்கள் தீபாவளிக்கு முந்தைய நாட்களில் பள்ளிக்கு வருவதில்லை. அந்நாட்களில், பல பள்ளிகளில், மாணவர் வருகை வெகுவாக குறைகிறது.
கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, '

கோவில் விழா, பண்டிகை நாட்களில், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வேண்டுகோளை ஏற்று, தலைமை ஆசிரியர் முடிவு செய்து, பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கலாம்; அந்த நாளுக்கு பதிலாக, மற்றொரு விடுமுறை நாளில் பள்ளி செயல்பட வேண்டும். அரசு தரப்பில், விடுமுறையாக அறிவிக்க முடியாது. ஆண்டுக்கு ஏழு நாள் வீதம், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளூர் விடுமுறை அளிக்க, விதிமுறைப்படி வாய்ப்புள்ளது,' என்றனர்.

சென்னை முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

Posted: 17 Oct 2014 08:40 PM PDT

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் - சி.இ.ஓ., ராஜேந்திரன், நேற்று திடீரென, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ராஜேந்திரன், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். சென்னைக்கு வருவதற்கு முன், கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றினார்.
அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய, 135 டன் இலவச பாட புத்தகங்கள், 'கரையான் அரித்துவிட்டது' என, பழைய பேப்பர் கடைக்கு போட்டதாக கூறப்படுகிறது.

இதில், தமிழக அரசுக்கு, பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதற்கு, அப்போது, முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த, ராஜேந்திரன் தான் பொறுப்பு என்றும் கூறி, நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

கல்வித்துறை செயலர் சபிதா, ராஜேந்திரனை, 'சஸ்பெண்ட்' செய்து, உத்தரவு பிறப்பித்ததை, அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தினார். ஓரிரு நாளில், பக்கத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஒருவரிடம், சென்னை மாவட்ட பொறுப்பு, கூடுதலாக ஒப்படைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

"டெட்" 'விலக்கு'க்கு கிடைத்தது 'விளக்கம்' : 'தினமலர்' செய்தியால் ஆசிரியர்கள் நிம்மதி!!

Posted: 17 Oct 2014 08:29 PM PDT

'தமிழகத்தில் 23.8.2010க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, அதன் பின் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சியில் விலக்கு அளிக்க வேண்டும்,' என, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மீண்டும் இயக்குனர் அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. 'கடந்த 2010 ஆக., 23க்கு முன் ஆசிரியர் பணி நியமன சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால் 2013 ஆக., 23க்கு பிறகும் பணி நியமனம் செய்யப்பட்ட அந்த ஆசிரியர்களுக்கு தகுதி (டி.இ.டி.,) தேர்வில் விலக்கு அளிக்கப்படும்' என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்தது.


இதன் அடிப்படையில், 2010 முதல் 2013 வரை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 18 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர். இவர்கள் தகுதி காண் பருவத்திற்கு விண்ணப்பித்தனர். அதை கல்வி அதிகாரிகள் ஏற்காமல், 'ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் தான் தகுதி காண் பருவத்தை முடிக்க இயலும்' என விண்ணப்பங்களை திருப்பி அனுப்பினர். இதனால், ஊதிய உயர்வு, ஊக்க ஊதியம், பண்டிகை கால

முன்பணம், வங்கி கடன் வாய்ப்பு உட்பட எவ்வித பலனும் கிடைக்காமல் 18 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 'தினமலர்' நாளிதழில் அக்.,11ல் செய்தி

வெளியானது. இதன் எதிரொலியாக, கல்வி இயக்குனர் அலுவலகம் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் 'இமெயில்' தகவல் அனுப்பப்பட்டது.

இதில் '2010 ஆக., க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, பின் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு டி.இ.டி., தேர்ச்சியில் விலக்கு அளிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. இதனால், தகுதிகாண் பருவம் உட்பட அனைத்து பலன்களும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறுகையில், 'டி.ஆர்.பி.,யின் டி.இ.டி., தேர்ச்சி விலக்கை கல்வி அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் தகுதி காண் பருவத்தை அவர்கள் முடிக்கமுடியவில்லை. இதை 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது. இதன்பின் இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட தெளிவான அறிவிப்பால் குழப்பத்திற்கு விளக்கம் கிடைத்துள்ளது' என்றனர்.

பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Posted: 17 Oct 2014 08:24 PM PDT

தமிழகம் முழுவதும்பருவமழை துவங்கியுள்ள நிலையில் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மேலும் திருவள்ளூர், தூத்துக்குடி நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி : யார் குற்றவாளி ?

Posted: 17 Oct 2014 08:58 PM PDT

அதை ஒரு வகுப்பறை என்று சொல்ல முடியாது. சில வகுப்பறைகளின் சேர்க்கை என்று தான் சொல்ல வேண்டும். பெரிய கூடம் ஒன்றின் சுவர்களில் மூன்று கரும்பலகைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கரும்பலகையின் முன்பும் சில பெஞ்சுகள் போடப்பட்டு அதில் சில மாணவர்கள் அமர்ந்திருந்தனர். சுமார் பத்திலிருந்து இருபது மாணவர்கள் கொண்ட ஒவ்வொரு குழுவும் ஒரு வகுப்பு. அது தான் மொத்த பள்ளிக் கூடமும். சுமார் 150 மாணவ மாணவிகளின் மத்தியில் ஒற்றை ஆளாக அங்குமிங்கும் ஓடி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியை பத்மினி. அது சிதம்பரம் நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் நகராட்சி நடுநிலைப்பள்ளி!


நாங்கள் அந்தப் பள்ளிக்கு மதிய உணவு வேளையின் போது சென்றடைந்தோம்.

சிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி
சிதம்பரம் நகரத்தின் மையத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி
"சார், ஒரு பத்து நிமிசம் காத்திருங்க. உணவு இடைவேளை துவங்கியதும் நாம் பேசலாம்" என்று எங்களிடம் கத்தரித்துக் கொண்ட ஆசிரியை பத்மினி, வகுப்புகளின் இடையே ஓடியாடுவதைத் தொடர்ந்தார். சிறிது நேரத்தில் உணவு இடைவேளைக்கான மணி அடிக்கப்பட்டது. உரையாடத் தொடங்கினோம்.
"இங்கே நீங்கள் மட்டும் தான் ஆசிரியையா?"
"இன்னும் சில ஆசிரியைகள் இருக்காங்க. இப்ப அவங்கெல்லாம் ரவுண்ட்ஸ் போயிருக்காங்க சார்" என்றவர், பின்பக்கமாகத் திரும்பி தனது உதவியாளரிடம் "எல்லாரையும் வரிசையா உக்கார வச்சி சாப்பாடு போடத் துவங்குங்க. நான் இதோ வந்துடறேன்" என்றார்.
"ஏன் ரவுண்ட்ஸ் போக வேண்டும்?"
"ஒரு காலத்துல ரொம்ப நல்லா நடந்த பள்ளிக்கூடம் சார் இது. பத்து வருசம் முன்னே 600 முதல் 700 மாணவர்கள் வரை இங்கே படிச்சிட்டு இருந்தாங்க. இந்த வருசம் மொத்தமே 150 மாணவர்கள் தான் இருக்காங்க. இப்போ பலரும் தனியார் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளை சேர்க்கிறாங்க. ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பாதியிலேயே படிப்பை நிறுத்திக்குறாங்க. மதிய உணவு சமயத்தில எங்க ஆசிரியைகள் இந்தப் பகுதியில் இருக்கும் ஏழைப் பெற்றோர்களைப் பார்த்து எப்படியாவது பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பச் சொல்லிக் கேட்கப் போயிருக்காங்க"
பெற்றோர்கள் அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு கௌரவம் பார்க்கிறார்கள் என்று ஆதங்கப்பட்ட பத்மினி, தனியார் பள்ளிகளில் உடல் ஊனமுற்ற மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்றும், இங்கே தாங்கள் அப்படியான பாகுபாடுகள் பார்ப்பதில்லை என்றும் சொன்னார். தனது பள்ளிக்கு வரும் குழந்தைகள் அனைவருமே ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
"போன வாரம் நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தை என்கிட்டே வந்து தொண்டை வலிக்குதுன்னு சொல்லி அழுதிச்சு சார். சாப்பிட்டியான்னு கேட்டேன். முந்தைய நாள் மதியம் இங்கே சாப்பிட்ட சத்துணவுக்குப் பின் எதுவும் சாப்பிடலைன்னு சொல்லிச்சி சார். மனசு கஷ்டமா போயிடிச்சு. நாங்க சாப்பிட வச்சிருந்ததை அவளுக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னோம் சார்… பெரும்பாலான பெற்றோர்களுக்கு பிள்ளைகளை ஏன் படிக்க அனுப்பறோம்னே தெரியலை. மாணவர்களுக்கும் ஏன் படிக்க வர்றோம்னு தெரியலை. இங்கே சுத்து வட்டாரத்தில் நிறைய கவரிங் பட்டறைகள் இருக்கு. திடீர்னு படிப்பை நிப்பாட்றவங்க, அந்தப் பட்டறைகளுக்கு வேலைக்குப் போயிடறாங்க. நாங்க அவங்க பெற்றோர்கள் கிட்டே கெஞ்சிக் கூத்தாடி பள்ளிக்கு அனுப்பச் சொல்லி கேட்டுக்கிட்டு இருக்கிறோம் சார்."
ஆசிரியை பத்மினி தழுதழுக்கும் குரலில் சொல்லிக் கொண்டே இருந்தார். எங்களோடு பேசிக் கொண்டிருந்தாலும் அவரது கவனம் முழுக்கவே குழந்தைகள் சாப்பிட்டார்களா என்பதிலேயே இருந்தது. இடையில் அவகாசம் கேட்டுக் கொண்டு குழந்தைகள் சாப்பிடுவதைக் கண்காணிக்கச் சென்று விட்டார். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
மதிய உணவு சாப்பிடும் சிதம்பரம் நகராட்சி பள்ளிக் குழந்தைகள்
மதிய உணவு சாப்பிடும் சிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள்
அந்த மாணவர்களில் பலரும் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருவதில்லை என்று தெரிந்தது. பல மாணவர்களின் பெற்றோர்கள் இருவருமே கூலி வேலைகளுக்குச் செல்பவர்களாகவே இருந்தனர். மாணவர்களும் ஒரு சில நாட்கள் பள்ளிக்கும் பெரும்பாலான நாட்கள் கூலி வேலைகளுக்கும் செல்வதாகத் தெரிவித்தனர். தங்கள் அப்பா அம்மாவுக்கு வயதாகி விட்டதால் அவர்களுக்கு கூலி வேலை கிடைப்பதில்லை என்றும், எனவே தாங்கள் வேலைக்குப் போவது தவிர்க்க முடியாது என்றும் சிலர் தெரிவித்தனர்.
சிதம்பரம், கடலூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட பகுதிகளில் நாங்கள் நேரில் பார்த்த அரசுப் பள்ளிகளின் நிலைமை அநேகமாக இப்படித்தான் இருந்தது. பல நடுநிலைப் பள்ளிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே தினமும் பள்ளிக்கு வருகின்றனர். ஒரே ஆசிரியர் எல்லா வகுப்புகளையும் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் பாடம் நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். அநேகமான பள்ளிகளின் நிலைமைகள் வாழ்ந்து கெட்ட குடும்பங்களை நினைவூட்டுவதாக இருந்தன. சந்தித்த அனைவருமே முன்னொரு காலத்தில் மாணவர்கள் நூற்றுக்கணக்கில் அணியணியாக பள்ளிக்கு வந்து சென்றதையும், இன்றைக்கு சில பத்து மாணவர்களோடு காற்றாடுவதையும் நினைத்து வேதனைப்பட்டனர்.
உலக வங்கியின் கடன் பெற்று நடத்தப்படும் தேசிய இடைநிலைக் கல்வித்திட்டத்தின் சார்பில் 2012-13 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தமிழகத்தின் 2253 பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் பணியில் இருப்பது தெரிய வந்தது. 83,641 மாணவர்கள் இத்தகைய ஓராசிரியர் பள்ளிகளில் படிக்கிறார்கள். 16,421 பள்ளிகளில் இரண்டே ஆசிரியர்கள்தான். 16 பள்ளிகளில் ஆசிரியரே இல்லை. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது அரசே நிர்ணயித்திருக்கின்ற விகிதமாகும். ஆனால் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் நான்கரை இலட்சம் மாணவர்களைப் பொருத்தவரை, நூறு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலைதான் உள்ளது. 21, 931 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தும் அவை நிரப்பப்படாமலேயே நீடிப்பதுதான் இந்த நிலைக்கு காரணம். கல்வியளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்வது, தனியார் கல்விக் கொள்ளையை ஊக்குவிப்பது என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் அரசுப் பள்ளிகளை அரசே சீரழிக்கிறது.
அரசின் கல்விக் கொள்கை மற்றும் அதன் நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகிய தூண்கள் தான் மாணவ சமுதாயத்தை தாங்கி நிற்கின்றன. எனவே இவை மூன்றையும் சேர்த்துத்தான் பரிசீலிக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் இமையம்.
ஆசிரியர்களுக்குப் முறையான பயிற்சியளிக்காமல் விடுவது, போதிய நிதி ஒதுக்காமலிருப்பது, காலியாகும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் விடுவது என்பதோடு சேர்த்து எந்த வரைமுறையுமின்றி தனியார் பள்ளிகளைத் திறக்க அனுமதியளித்துக் கொண்டிருக்கிறது அரசு. தனியார் கல்வி வியாபாரிகள், ஊருக்கு வெளியே – மக்கள் வாழ்விடங்களுக்குத் தொடர்பில்லாத இடங்களில் – சில பத்து ஏக்கர்கள் அளவுள்ள நிலத்தை வளைத்துப் போட்டு தங்கள் கல்வித் தொழிற்சாலைகளைத் திறக்கிறார்கள்.
50 கிலோ மீட்டர்கள் வரை கூட பள்ளிப் பேருந்துகளை அனுப்பி மாணவர்களை அள்ளி வரும் இவர்கள், மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசிமான வசதிகளைக் கூட பள்ளிகளில் செய்து கொடுப்பதில்லை. தமிழகமெங்கும் நச்சுக் காளான்கள் போல் பரவியிருக்கும் தனியார் பள்ளிகளில் சுமார் 1500 பள்ளிகளுக்கு அங்கீகாரமே இல்லை. தனியார் பள்ளிகளின் கல்வி முறையோ, பட்டியில் போட்டு பன்றிகளை வளர்ப்பதற்கு ஒப்பாக மாணவர்களை அணுகுவதாய் இருக்கிறது. எந்த சமூக அறிவோ, பொறுப்போ இல்லாத தக்கை மனிதர்களையே தனியார் பள்ளிகள் சமூகத்திற்குப் பரிசளிக்கின்றன.
கட்டணக் கொள்ளை அடிப்பது ஒருபுறமிருக்க, படிக்காத மாணவர்களுக்கு அபராதம் விதிப்பது, ஊனமுற்ற மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள மறுப்பது, மாணவர்களுக்கு விளையாட்டை மறுப்பது, அதிகப்படியான வீட்டுப்பாடங்கள் கொடுப்பதன் மூலம் அவர்களுடைய ஓய்வு நேரத்தைக் கூடக் கூடக் களவாடுவது என்று அடிப்படை மனித உரிமைகளுக்கே எதிரானவைகளாக தனியார் பள்ளிகள் இருக்கின்றன. எனினும் பெற்றோர் அப்பள்ளிகளைத் தான் நாடுகின்றனர். அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதை கௌரவக் குறைச்சல் என்று கருதுகிறார்கள்.
அரசும் ஆசிரியர்களைக் கண்காணிப்பதிலோ, அவர்களை தரமுயர்த்துவதிலோ எந்த அக்கறையும் காட்டுவதில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி அளிக்க ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் ஒரு பயிற்சி மையம் உள்ளது. இங்கு பயிற்சியாளர்கள் குறைவு என்பதோடு இருப்பவர்களும் எந்தவித வகுப்பறை அனுபவமும் இல்லாதவர்கள் என்கிறார் எழுத்தாளரும், ஆசிரியருமான கரிகாலன். உதாரணமாக ஒரு பாடத்தைப் பற்றிய சிந்தனை வரைபடம் (Mind map) தயாரித்து மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஆற்றலை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய இவர்களுக்கே அது தொடர்பான அனுபவ அறிவு இல்லை என்கிறார் அவர்.
"ஆசிரியர்களில் பலரும் முப்பது வருசம் முன்னே படிச்சதை வச்சிகிட்டு இன்னும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களை ஒரு ஆசிரியர் மேலாண்மை செய்ய வேண்டுமென்றால், முதலில் அவருக்கு நடப்பு உலகின் நவீன மாற்றங்களைப் பற்றிய அறிவும், அவற்றை சமூகத்தோடு பொருத்திப் பார்த்து விளக்கும் ஆற்றலும், அந்த வகையில் கல்வியை சமூகக் கண்ணோட்டத்தோடு போதிக்கும் திறனும் அவசியம். ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது அறிவை கால மாற்றத்துக்கேற்ப வளர்த்தெடுக்கத் தவறுகிறார்கள்" என்கிறார் இமையம்.
அரசுப் பள்ளி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்து விட்டால் பணி ஓய்வு வரை எந்தத் தொல்லையும், நெருக்கடியும் இன்றி காலத்தை ஓட்டிக் கொள்ளலாம்; அரசு சம்பளத்தை ஒரு நிலையான வருமானமாக வைத்துக் கொண்டு தனியே வட்டிக்கு விடுவது, தனியார் டியூசன்கள், தனியார் பள்ளிகளில் பங்குதாரராக சேர்ந்து கொள்வது என்று பல்வேறு வழிகளில் சம்பாதிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்கிற பிழைப்புவாத கண்ணோட்டமே பல ஆசிரியர்களிடமும் நிலவுகிறது. சிதம்பரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியை பத்மினி போன்றவர்கள் அபூர்வமான விதிவிலக்குகள்.
சிதம்பரம் நகராட்சி பள்ளியின் தலைமையாசிரியை பத்மினி
சிதம்பரம் நகராட்சி பள்ளியின் மதிய உணவு நேரத்தின் போது – தலைமையாசிரியை பத்மினி
"முதலில் அரசுப் பள்ளி என்பது ஒரு பொதுச் சொத்து, நமது சொத்து என்கிற அறிவு எல்லோருக்கு வரணும். இது நம்முடைய பள்ளி என்று ஆசிரியர்களும் நினைக்க வேண்டும். 'எவன் கட்டிய மடமோ எனக்கென்ன வந்தது' என்பது போன்ற நினைப்பு தான் இவர்களுக்கு இருக்கிறது?" என்கிறார் இமையம். "அரசு நிதி ஒதுக்கல, கட்டிடம் கட்டித் தரல என்று குற்றம்சாட்டுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்றாலும், இருப்பதைக் கூட எந்த லட்சணத்தில் பராமரிக்கிறோம் என்பதும் முக்கியமானதில்லையா?" இங்கே இருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் ஆயிரத்துக்கும் மேல் மாணவர்கள் படிக்கிறார்கள். 50க்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள். அந்தப் பள்ளியின் முக்கிய கட்டிடத்தில் காக்கை எச்சம் போட்டு அரச மரச் செடி ஒன்று முளை விட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. இதைப் பிடுங்கிப் போட கருணாநிதியும், ஜெயலலிதாவுமா நேரில் வரணும்? ஏன் அந்தப் பள்ளிக்கு தினசரி வந்துபோகும் ஒருத்தன் கண்ணிலுமா அது தென்படல?" என்று கேட்கிறார்.
மேலும், "மாணவர்களின் வாழ்க்கைக்கான ஆசான்களாகவும், முன்னுதாரணங்களாகவும் இருக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை. முன்பு ஆசிரியர் என்பவர் பள்ளிக்கு அருகாமையில் வசிக்க வேண்டும் என்கிற விதி கறாராகப் பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக வகுப்பறைக்கு வெளியேயும் மாணவர்கள் ஆசிரியர்களைச் சந்திப்பதற்கும், ஆசிரியர்கள் மாணவர்களின் பள்ளிக்கு வெளியேயான செயல்பாடுகளைக் கவனிப்பதற்கும், அவர்களின் குடும்பத்தின் சமுகப் பொருளாதாரப் பின்னணி குறித்து அறிந்து கொள்வதற்கும் வாய்ப்புகள் இருந்தது. தற்போது பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளி அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 30 அல்லது 40 கிலோ மீட்டர் தூரத்தில், தள்ளி வசிப்பவர்களாக இருக்கிறார்கள்."
"மாணவர்களின் மீது எந்தவிதமான உணர்வுப்பூர்வமான பிடிப்புமற்று ஆசிரியப் பணியே கூலிக்கு மாரடிப்பது என்கிற அளவுக்குச் சுருங்கிப் போயிருக்கிறது. மாணவர்கள் ஏன் பள்ளிக்கு வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, ஏன் வருவதில்லை என்பது பற்றியும் ஆசிரியர்களுக்கு எந்தப் புரிதலும் கிடையாது. மாணவர்களின் சமுக செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய அறிவற்ற ஆசிரியர்களால், அவர்களின் வகுப்பறைச் செயல்பாடுகளின் மீது எந்த வகையான மேலாண்மையையும் செலுத்த முடிவதில்லை" என்று நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுகிறார் இமையம்.
"சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளியொன்றில் கடந்த பிப்ரவரி மாதம் நான்கு மாணவிகள் காதலர் தினத்தைக் கொண்டாடும் விதமாக வகுப்பறையிலேயே பீர் குடித்துள்ளனர். 12-ம் வகுப்பு மாணவர்கள் பீர் குடிக்கலாம் என்பது ஒரு பொதுக் கலாச்சாரமாக வளர்ந்து வருகிறது. இணையம், செல்போன் உள்ளிட்ட நவீன விஞ்ஞான சாதனங்கள் மூலம் தனியார் பள்ளி மாணவர்கள் பாலியல் ரீதியில் வெகு வேகமாக சீரழிகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டாஸ்மாக்" என்று மாணவர்களிடையே பரவும் கலாச்சாரச் சீரழிவை சுட்டிக்காட்டுகிறார் எழுத்தாளரும், ஆசிரியருமான கரிகாலன்.
தனியார் பள்ளி மாணவர்கள் பட்டியில் அடைத்து பயிற்றுவிக்கப்படுகிறார்கள். மறுபுறம் அரசுப் பள்ளி மாணவர்களோ கட்டுப்பாடற்றவர்களாக சீரழிவதற்கான வாய்ப்புகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. இந்த சமூகப் பண்பாட்டு பின்புலத்தில், கல்வியை அரசு புறக்கணித்து வருவதன் விளைவுதான் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி. சமீபத்தில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் சிதம்பரம், கடலூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் கடுமையாக குறைந்து போயிருப்பதையும், மாணவர் சேர்க்கை விகிதம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே போவதையும் இந்தப் பின்னணியில் வைத்துதான் பரிசீலிக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளின் அவல நிலைமையை தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கொள்ளையடித்துக் கல்லா கட்டத் துவங்கியுள்ளன. இந்தக் கொள்ளைக்கு உதவும் விதத்தில் ஆண்டு தோறும் தமிழக அரசே கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்கிறது. சென்னையில் ஒரு மழலையர் பள்ளிக்கான ஆண்டுக் கட்டணத்தை ரூ. 30,000 க்கு மேல் என்று அரசே நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறது.
இதுவும் போதாதென்று அரசு நிர்ணயித்த கட்டணத்தைப் போல பன்மடங்கு கட்டணத்தை அதிகமாக வசூலிக்கின்றன தனியார் பள்ளிகள். எந்தவித கணக்கோ, ரசீதோ இல்லாமல் பள்ளி முதலாளிகள் நடத்தும் இந்தக் கொள்ளைக்கு வழக்கம் போல கல்வித்துறை, அதிகார வர்க்கம் துணை நிற்கின்றன. கட்டணக் கொள்ளையைத் தட்டிக்கேட்ட பெற்றோர் சங்கத்தினரை காசுக்கு அழைத்து வரப்பட்ட கூலிப்பட்டாளத்தை வைத்து மிரட்டியிருக்கிறார், சிதம்பரம் வீனஸ் பள்ளியின் முதலாளி.
"தற்போது அரசுப் பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை திடீரென்று ஏற்பட்ட ஒன்றல்ல. இதற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது" என்கிறார் கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபால். 1947 க்கு முன் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுப் பள்ளிகள் பின்னர் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தன. அவசரநிலைக் காலம் வரையில் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த மதிய உணவு திட்டத்துக்கு அமெரிக்காவைச் சேர்ந்த கேர் என்கிற என்.ஜி.ஓ நிதி வழங்கியது. அரசு வருடாந்திரம் ஒதுக்கும் நிதியானது புதிய பள்ளிகள் துவங்கவும், கட்டிடங்கள் கட்டவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அவசர நிலைக் காலத்துக்குப் பின்னர் அமெரிக்க நிதியின் வருகை நின்றது. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அரசு நிதி சத்துணவுத் திட்டத்திற்கு திருப்பி விடப்பட்டு, உள்கட்டமைப்பு மற்றும் புதிய பள்ளிகள் கட்டுவது குறைக்கப்பட்டது. தனியார் முதலாளிகளுக்கு புதிய கல்வி நிறுவனங்கள் துவங்குவதற்கான உரிமங்களை அரசு வழங்கத் துவங்கியது. இப்படி துவங்கிய தனியார் கல்வி நிறுவனங்கள் தான் இன்று ஆக்டோபஸ் போல வளர்ந்து தமிழகத்தை சுற்றி வளைத்துள்ளது. இன்று தனியார் பள்ளிகளில் 70 சதவீத பள்ளிகளில் அடிப்படை வசதிகளோ, உள்கட்டமைப்புகளோ இல்லை என்கிறார் எஸ்.எஸ். ராஜகோபால். மேலும், இந்த தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் உரிய தகுதியற்றவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
தனியார் பள்ளிகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் மயங்கும் மக்கள், அரசுப் பள்ளிகள் நம்முடையவை என்பதையும், கல்வி என்பது ஒரு அடிப்படைத் தேவை என்பதையும், கல்வியளிக்க வேண்டியது அரசின் கடமை என்பதையும் உணர வேண்டியது அவசியம் என்கிறார் ராஜகோபால். மேலும், மக்கள் சாதாரணமாக வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கான விலையிலும் கல்விக்கான 2 சதவீத வரியும் சேர்ந்துள்ளது. எனவே, அரசுப் பள்ளிகள் சீரழிகின்றது என்பதன் பொருள் தமது சொந்தப் பணம் பறிபோவது தான் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதையும், மக்கள் அனைவருக்கும் அதனை வழங்குவது அரசின் கடமை என்பதையும் மக்களே மறந்து போகும் அளவுக்கு தனியார்மயக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதில் அரசும், ஆளும் வர்க்கமும் வெற்றி பெற்றிருக்கின்றன. அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் என்பது போய் பாட்டில் பத்து ரூபாய் அம்மா வாட்டர், அனைவருக்கும் இலவச மருத்துவம் என்பதற்குப் பதில் இன்சூரன்சு திட்டம், அனைவருக்கும் இலவசக் கல்வி என்பதற்குப் பதில் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு என்று எல்லாத் துறைகளிலும் தனியார்மயமே நியதி என்று ஆக்கப்பட்டு வருகிறது.
இதனை விரைந்து சாத்தியமாக்கும் நோக்கத்துடன்தான் அரசுப் பள்ளிகள் வீழ்ச்சியை நோக்கித் தள்ளப்படுகின்றன. கடலூர் மாவட்டப் பள்ளிகளில் நாம் பார்த்த நிலைமைகள்தான் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் நிலவுகிறது. சென்னையிலும் கூட மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும், பள்ளிகளின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. இத்தகைய மிக மோசமான சூழலிலும், தங்களது அளப்பறிய ஈடுபாட்டின் காரணமாக சில ஆசிரியர்களும், ஆசிரியைகளும் மிகக் கடுமையாக உழைத்து அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றி வருகிறார்கள்.
இருப்பினும் கல்வி உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கு இன்று தேவைப்படுவது ஒரு போராட்டம். தனியார் கல்வி முதலாளிகளையும், அவர்களது புரவலரான இந்த அரசையும் எதிர்த்த போராட்டம். மொத்தத்தில் தனியார்மயக் கொள்கைக்கு எதிரான போராட்டம்!
- புதிய கலாச்சாரம் செய்தியாளர்
You are subscribed to email updates from tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog
To stop receiving these emails, you may unsubscribe now.
Email delivery powered by Google
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610

No comments:

Post a Comment