வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Wednesday, September 20, 2017

தூதுவளைச் சட்னி, ஓமவல்லி பஜ்ஜி, சுக்குக் காபி... மழைக்காலத்துக்கு ஏற்ற உணவுகள்!

மழைக்காலம் தொடங்கி விட்டது. திடீர், திடீரென்று வானிலை மாறுகிறது. நன்கு வெயிலடிக்கிறது. சிறிது நேரத்தில் கொட்டுகிறது மழை. பருவநிலை beயில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களால்  ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமல், சளி, காய்ச்சல், வாந்தி, பேதி என நோய்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதுபோன்ற சூழல்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக உணவு விஷயத்தில் கவனம் தேவை.

காலை முதல் இரவு வரை சாப்பிடக்கூடிய, அருந்தக்கூடிய அனைத்துமே சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவையாக இருக்க வேண்டும். காலையில், காபிக்குப் பதிலாக இஞ்சி, துளசி சேர்த்துக் கொதிக்க வைத்த தேநீர் அருந்துவது நல்லது. தொண்டை கரகரப்பு, ஜலதோஷம் இருந்தால் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளிப்பது நல்லது. மேலும் குடிக்கும், குளிக்கும் நீர் மிதமான சூடாக இருந்தால் நல்லது. சளித்தொந்தரவுகள் இருந்தால் நொச்சி அல்லது யூகலிப்டஸ் இலையைப் போட்டு கொதிக்க வைத்த நீரில் குளிப்பது நலம்.

துளசி, தூதுவளை, ஓமவல்லி, இஞ்சி, மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது உப்பு சேர்த்துக் குடித்து வரலாம். இதை காலை, மாலை வேளைகளில் அருந்தலாம். காலை உணவாக மிளகுப் பொங்கல் சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு இணை உணவாக தூதுவளைச் சட்னி, இஞ்சித் துவையல் சேர்த்துக் கொள்ளுங்கள். முற்பகல் வேளையில் தூதுவளை சூப், கண்டதிப்பிலி சூப் அருந்துங்கள். 

முசுமுசுக்கையை துவையலாகவோ, தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால் காய்ச்சல், சளியுடன் கூடிய காய்ச்சல், நாக்குச் சுவையின்மை போன்றவை சரியாகும். ஜலதோஷம் பிடிப்பதுபோல் இருந்தால் மணத்தக்காளிக் கீரையின் சூப் அருந்தினால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இந்த சூப் சூடு பொறுக்கக் குடிக்க வேண்டியது அவசியம்.

மழைக்காலங்களில் பால் மற்றும்  தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் இனிப்பையும் குறைக்க வேண்டும். காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம், சின்ன வெங்காயம் (பச்சையாக) சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மதிய உணவு சூடாக இருந்தால் மிகவும் நல்லது. நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கன்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை குறைத்துக் கொள்ளலாம். அசைவ உணவுகஷைப் பொறுத்தவரை, மீன், முட்டை, இறைச்சி சாப்பிடலாம். நெஞ்சுச்சளி இருப்பவர்கள் நண்டுக் குழம்பு சாப்பிடுவதன்மூலம் நிவாரணம் கிடைக்கும்.

குளிர்காலத்தில் சிலருக்கு சருமம் வறண்டுபோகும். அத்தகைய பிரச்னை உள்ளவர்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, தேன் போன்றவற்றை சாப்பிடுவது பலனளிக்கும். எலுமிச்சை, ஆரஞ்சு ஒத்துக்கொள்ளாதவர்கள் தவிர்த்து விட வேண்டும்.  பொதுவாக வைட்டமின் ஏ, சி சத்துகள் அதிகம் உள்ள பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. கீரைகள், காய்கறிகளை அதிக அளவு சேர்த்துக் கொள்ளலாம். கீரை, காய்கறி சூப் அருந்துவது நல்லது. மற்றபடி மழைக்காலங்களில் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். 

மாலைச் சிற்றுண்டியின்போது போண்டா, பஜ்ஜி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் ஓமவல்லி பஜ்ஜி, கல்யாணமுருங்கை வடை போன்றவற்றை செய்து சாப்பிடலாம். சளித்தொல்லையின்போது இரண்டு, மூன்று ஓமவல்லி இலைகளை மென்று தின்று சூடான நீர் அருந்தினால் பலன் கிடைக்கும். ஓமவல்லி இலையைக் கழுவி 2 மி.லி சாறு எடுத்து அதனுடன்  8 மி.லி தேன் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் மார்புச் சளி கட்டுக்குள் வரும். 

முள் முருங்கை என்று சொல்லப்படும் கல்யாண முருங்கை அடை அல்லது வடை செய்து சாப்பிடுவதும் சளியை அகற்றும். ஊற வைத்த புழுங்கல் அரிசியுடன் கல்யாண முருங்கை இலையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து மிளகு, சீரகம், உப்பு சேர்த்து அடையாகவோ, வடையாகவோ செய்து சாப்பிடலாம். உளுந்த வடை அல்லத் கடலைப்பருப்பு வடையுடன் சேர்த்தும் செய்யலாம். எண்ணெய் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.

மாலை நேரங்களில் சுக்கு, மிளகு, தனியா, ஏலக்காய் சேர்த்துப் பொடித்துக் கொதிக்க வைத்து பனைவெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட சுக்குக் காபி குடித்து வருவது நல்லது..மழைக் காலங்களில் ஏற்படும் செரிமானக் கோளாறு மற்றும் சளித்தொல்லைகள் விலகும். கொள்ளு சூப், வெற்றிலை பஜ்ஜி போன்றவையும் இந்தச் சூழலுக்கு இதம் சேர்க்கும். 

மூக்கடைப்பு, சளித்தொல்லை இருந்தால் இரவில் உறக்கம் வராது. ஆகவே இரவு உணவை முடித்தபிறகு பூண்டுப்பால் அருந்துவது பலன் தரும். தோலுரித்த வெள்ளைப் பூண்டுடன் பால், தண்ணீர் சேர்த்து வேக வைத்து மிளகுத் தூள், மஞ்சள் தூள், பனங்கல்கண்டு சேர்த்து கடைந்து குடித்தால் சளித்தொல்லை விலகும். இரவில் நிம்மதியான உறக்கம் வரும். 

இருமல் இருந்தால் தக்காளி சூப் அருந்தி பலன் பெறலாம். முழு தக்காளியுடன் நான்கைந்து வெள்ளைப் பூண்டு சேர்த்து நசுக்கிப் போட்டு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து உப்பு சேர்த்து வடிகட்டி குடித்தால் இரவில் இருமல் தொல்லை இல்லாமல் இருக்கலாம். தலைபாரம், மூக்கடைப்பு இருந்தால் தலையணையில் நொச்சித் தழைகளை வைத்து உறங்குவது பலன் தரும். தேங்காய் எண்ணெயைச் சூடுபடுத்தி கற்பூரம் சேர்த்துக் கரைந்ததும் நெஞ்சு, கழுத்து, முதுகு மற்றும் விலாப்பகுதியில் சூடு பறக்கத் தேய்த்தாலும் 

காய்ச்சல் வந்தால் நிலவேம்புக் கஷாயம், பப்பாளி இலைக் கஷாயம், கொய்யா இலைக் கஷாயம், மிளகு கஷாயம் போன்றவற்றை அருந்துவது நல்லது. கைப்பிடி கறிவேப்பிலையுடன் நான்கைந்து மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், சிறு துண்டு இஞ்சி சேர்த்து மையாக அரைத்து சுடுநீர் சேர்த்து வடிகட்டி தேன் சேர்த்து குடித்து வந்தாலும் காய்ச்சல் விலகும். காய்ச்சல் நேரங்களில் பார்லி சூப் அருந்துவது இதமளிக்கும். காய்கறிகள், மிளகு, பூண்டு, பால், உப்பு சேர்த்தோ தனியாகவோ சூப் செய்து குடிக்கலாம்.

மழைக்காலங்களில் கடை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சுகாதாரமற்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. கூட்டு, பொரியல், சூப் செய்யும்போது மிளகுத் தூள் சேர்ப்பது நல்லது. இரவு உணவில் பச்சைப்பயறு, கேழ்வரகு, கீரை போன்றவற்றைச் சேர்க்கக் கூடாது. ஐஸ்கிரீம், கூல்டிரிங்க்ஸ் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ப்ரிட்ஜில் வைத்த உணவுகளை வெளியே எடுத்து வைத்து மெதுவாக பயன்படுத்துவது நல்லது.