சிவப்பு, காவி, கருப்பு என மூன்று நிறங்களில் மாறிமாறித் தோன்றும் அதிசய லிங்கம்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் ஒன்று தோல்பூர். அங்கு ஒர் அதிசயிக்கத்தக்க சிவாலயம் இருக்கிறது. அந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் தினமும் நிறம் மாறிக்கொண்டிருக்கிற அதிசயத்தை அங்கு காணமுடிகிறது.
தோல்பூரில் உறைந்திருக்கும் சிவனின் பெயர் அக்க்ஷலேஷ்வர் மஹாதேவ் என்பதாகும். இங்குள்ள சிவலிங்கத்தின் நிறம் ஒரு நாளைக்கு மூன்று முறை தானாகவே மாறிக்கொள்ளும் பேரதிசயம் தினமும் நடந்து கொண்டு இருக்கிறது.
அங்கு சென்று பார்த்த சில ஆராய்ச்சியாளர்கள், சூரிய ஒளியின் பிரதிபலிப்பால் லிங்கத்தின் நிறம் மாறியிருக்கும் எனக் கருதுகின்றனர்.
ஆனால் இதுவரையிலும் அதற்கான சரியான காரணத்தைக் கூறும் ஆய்வு நிகழ்த்தப்படவில்லை.
காலையில் செக்கச் சிவந்த நிறத்தில் இருக்கும் இந்த லிங்கம் மதிய நேரங்களில் காவி நிறத்தில் காட்சியளிக்கிறது. அடுத்து இரவு நேரங்களில் கருப்பாகக் காட்சியளிக்கும் லிங்கம் திரும்பவும் காலையில் சிவப்பாக மாறிவிடுகிறது.
இரவு முழுக்க கருப்பு நிறத்தில் இருக்கும் சிவன் பகல் நேரங்களில் பக்தர்களை முழுமையாக ஆதிர்வதிக்கிறார் என்பதற்கான குறியீடாகவே இந்த நிற மாற்றம் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யங்கள் இந்த கோவிலுக்குள் புதைந்திருக்கின்றன.
அக்ஷலேஷ்வர் மஹாதேவ் ஆலயத்தில் உள்ள இந்த லிங்கத்தின் உயரம் என்ன என்பதை இதுவரையிலும் யாராலும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இதன் அடிப்பகுதி ஆயிரம் அடிகளையும் தாண்டி, தரைக்குக் கீழே புதைந்து கிடக்கிறது. சிவன் அடிமுடி காண முடியாதவர் என்பதை உணர்த்துகிற ஆலயமாகவும் இது விளங்குகிறது. பலர் முயற்சி செய்தும் இதன் அடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
திருமணம் ஆகாத ஆண், பெண் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத்துணை விரைவாக அமைந்துவிடுமாம்.
பூமியில் சிவன் காலடி எடுத்து வைத்த ஒரே இடம் இது தான். இந்த இடம்தான் பூமியின் மையமாக இருக்கும் என இந்த கோவில் நிர்வாகத்தினர் குறிப்பிடுகின்றனர்.