வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Monday, June 22, 2015

பொதுமக்கள் தங்கமாக வாங்குவதை தவிர்க்க புதிய திட்டம்: தங்க பத்திரங்கள் வெளியிட மத்திய அரசு முடிவு

பொதுமக்கள் தங்கமாக வாங்குவதை தவிர்க்க புதிய திட்டம்: தங்க பத்திரங்கள் வெளியிட மத்திய அரசு முடிவு
     பொதுமக்களின் தங்க தாகத்திற்கு தடை போட்டு, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சியாக, தங்க பத்திரங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பத்திரங்களில் பொதுமக்கள் முதலீடு செய்து, முதிர்ச்சியின் போது, தங்கத்திற்கு ஈடாக பணம் பெற வசதி செய்யப்பட உள்ளது.

        தங்கத்தின் மீதான தணியாத ஆசையால், முடிந்த அளவுக்கு தங்கத்தை வீட்டில் இருப்பு வைத்துக் கொள்வதை நம்மவர்கள் வழக்கமாக கொண்டுஉள்ளனர். அவசர காலத்தில், எளிதாக பணமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதால், பொதுமக்கள் தங்களின் முதலீட்டில், தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனால், மறைமுகமாக, மத்திய அரசுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில், பெரும்பாலானோர் தங்கம் வாங்க முன்வருவதால், ஏராள மான தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நேரிடுகிறது. அத்தகைய நேரங்களில், அமெரிக்க டாலராக கொடுத்து, தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், அமெரிக்க டாலருக்கு தேவை அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து விடுகிறது.இதனால், பொருளாதாரமும் ஒரு வகையில் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்கவும், தடுக்கவும், மத்திய அரசு பல திட்டங்களை பின்பற்றி வருகிறது.

புதிதாக, தங்க பத்திரங்கள் வெளியிட்டு, தங்கம் வாங்க விரும்புபவர்களை, அதில் முதலீடு செய்யச் செய்து, தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தலாம் என்பது அரசின் எண்ணம்.
வெறுமனே, தங்க பத்திரத்தில் முதலீடு செய்யச் சொன்னால், யாரும் முன்வர மாட்டார்கள் என்பதால், அத்தகைய முதலீடுக்கு, குறிப்பிட்ட அளவு வட்டியும் கொடுக்க அரசு முன்வந்துள்ளது.
தங்கத்தின் விலை உயர்வதால் தான், தங்கத்தில் பலரும் முதலீடு செய்கின்றனர். அதற்கு பதில், தங்க பத்திரத்தில் முதலீடு செய்தால், தங்கம் இறக்குமதி செய்ய தேவையிருக்காது. முதலீடுக்கும் வட்டி கிடைக்கும் என்பதால், பலரும் அதில் முதலீடு செய்வர் என்பது அரசின் நம்பிக்கை.அனைத்து தரப்பினரும் எளிதாக முதலீடு செய்ய வசதியாக, 3 கிராம் துவங்கி, பல
விதமான எடையில் தங்க பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளன.

உதாரணமாக, 3 கிராம் தங்கத்தை, ஒருவர் வாங்க விரும்புகிறார் என்றால், தங்கமாக வாங்குவதற்குப் பதில், தங்க பத்திரமாக அவர் வாங்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல், எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் அவர் முதலீடு செய்யலாம். முதலீடு முதிர்ச்சி அடையும்போது, அப்போதைய சந்தை விலையில், அவர் வாங்கிய கிராம் தங்க பத்திரத்திற்கு ரொக்கமாக வழங்கப்படும். இதுபோக, ஆண்டுக்கு குறிப்பிட்ட சதவீத வட்டியும் அந்த முதலீடுக்கு வழங்கப்படும்.மத்திய அரசின் முதலீட்டு திட்டம் இது என்பதால், பாதுகாப்பாக இருக்கும். இதில், ஏராளமானோர் முதலீடு செய்வர் என்பது அரசின் நம்பிக்கை.இதற்கான அறிவிப்பு, இன்னும் சில தினங்களில், அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட்டில் அறிவிப்பு:

கடந்த பிப்ரவரியில், நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, லோக்சபாவில் தாக்கல் செய்து, நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசும் போது, தங்க பத்திரம் வெளியிடுவது பற்றி கூறியதாவது:நாட்டின் தங்க இருப்பு, 20 ஆயிரம் டன் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தங்கம், வர்த்தகத்தில் ஈடுபடுத்தவோ அல்லது தங்கத்தை ஈடாக வைத்து பணமாக ஈட்டவோ இல்லாமல் சும்மா முடங்கிக் கிடக்கிறது.எனவே, தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஏதுவாக, தங்க பத்திரம் வெளியிடப்படும். முதலீடுக்கு குறைந்தபட்ச வட்டியும் வழங்கப்படும். 2 சதவீத வட்டி வழங்கலாம் என முடிவு செய்துள்ளோம்; இது, மாறவும் கூடும். இவ்வாறு, அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

கடன் பெற வசதி:

இந்த திட்டத்தின் அம்சங்கள், இன்னமும்
முழுமையாக முடிவு செய்யப்படவில்லை. எனினும், மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலின் படி, கீழ்கண்டவை முக்கிய அம்சங்களாக கருதப்படுகின்றன.
* தங்க பத்திரங்களை, ரிசர்வ் வங்கி வெளியிடும்.
* 2, 3, 5 கிராம் எடைகளிலும் பத்திரம் விற்கப்படும்.
* தங்க பத்திரங்களில் கிடைக்கும் வட்டி, மூலதன ஆதாய வரி விதிப்புக்கு உள்ளாகும்.
* தபால் அலுவலகம், வங்கிகள், வங்கி சார்ந்த நிறுவனங்களில் இந்த பத்திரங்கள் விற்கப்படும்.
*இந்த பத்திரங்களை, வங்கிகளில் மற்றும் பிற நிதி அமைப்புகளில் அடகு வைத்து பணம் பெற முடியும்.
* எளிதாக பிறருக்கு விற்க முடியும்.
* ஒவ்வொரு ஆண்டும், 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.
* 300 டன் தங்கம் மதிப்பில், தங்க பத்திரங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட
உள்ளது.