வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Thursday, March 05, 2015

பேதி மாத்திரை

பேதி மாத்திரை

நம் உடலிற்குத் தேவையான சத்துகள் நாம் உண்ணும் உணவில் இருந்தே பெறுகிறோம். உணவில் இருந்து சத்துக்களை உடலுக்கு பிரித்தளிக்கும் வேலையை செய்வது நமது வயிறு. இதனை தூய்மையாய் வைத்திருந்தால் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும் என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.

எப்படி சுத்தமாய் வைத்திருப்பது என்கிற கேள்வி இன்னேரத்துக்கு உங்களுக்கு வந்திருக்கும்.

ஒரு நாளிற்கு இரண்டு முறை மலம் கழிப்பதும், வருடத்திற்கு இரு முறை பேதி மருந்து உட்கொள்வதும் தான் அந்த விதிகள்.

எளிமையான விதிகள் தானே.!

எல்லாம் சரிதான், அதென்ன பேதி மருந்து?

இந்த பேதி மருந்தைப் பற்றி தேரையர் தனது "தேரையர் வைத்திய காவியம்" நூலில் "பேதி மாத்திரை" என்ற பெயரில் அருளியிருக்கிறார். அந்த பாடல்கள் பின்வருமாறு...

ஆகும் பேதி யரையுங் கிராம்புடன்
வாகு வோமம் வரையும் லவங்கமும்
பாகு சீரம் பகருஞ் சாதிக்காயும்
கூகு நீருங் குறிப்பாய் சமன்தூக்கே.

தூக்கு சுக்குடன் துய்ய கஸ்தூரியும்
தாக்கி வேளை தனிய வசம்புடன்
போக்கில்லாத பொருந்துங் கஸ்தூரியும்
நோக்கி வென்னீரில் நுருங்க வரைத்திடே.

அரைத்துச் சுண்டைக் காயளவுப் பிரமாணம்
கரைத்து வென்னீரிற் காலையில் தானீய
வரைத்த பேதியும் வாகாப் பிழிந்திடும்
திரைத்த வென்னீரு மன்னமு முண்டிடே

கராம்பு, ஓமம், லவங்கம், சீரகம், சாதிக்காய், சுக்கு, கஸ்தூரி, வசம்பு, ஆகிய சரக்கு வகைகளைச் சம அளவாக நிறுத்து எடுத்து, அவற்றை கல்வத்தில் போட்டு நீர் விட்டு நன்றாக அரைத்து, சுண்டைக்காய் அளவில் குளிகைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். இதுவே "பேதி மாத்திரை".

தேவை ஏற்படும் போது இந்த மாத்திரையில் ஒன்றினை எடுத்து காலை வேளையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் கரைத்து கொடுத்தால் நன்றாகப் பேதியாகுமாம். இதற்கு பத்தியமாக மருந்துண்ணும் நாளில் சாதத்தில் வெந்நீர்விட்டு சாப்பிடவேண்டும் என்கிறார்.

மாத்திரை - மாத்திரை என்றால் அளவு என்று பொருள். எந்த அளவில் மருந்து கொடுக்க வேண்டுமோ அதற்குரிய அளவுக்குரியது மாத்திரை எனப்படும் உருண்டையாக இருப்பதால் உண்டை என்பர். சில சரக்குகளைச் சேர்த்து சாறுகள் அல்லது குடிநீர்களால் அரைத்து அளவாக உருட்டி உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்வது.