வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Thursday, October 26, 2017

ரெண்டு இட்லி!

ரெண்டு இட்லி!

இரக்க குண பெண்மணி ஒருத்தி 
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு,
ஏதோ முனகிக் கொண்டே போவான்.
இது அன்றாட வழக்கமாயிற்று!.

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,
கிழவன் என்ன முனகுகிறான் என்று
செவிமடுத்து கேட்டாள்.

அவன் முனகியது, இதுதான்:
" நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;
நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்."

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.
'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;
"நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு
கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும்,
"இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்;
" ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ;
ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்;
செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்" ன்னு
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.

'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்.
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்!
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,
கொலை வெறியாக மாறியது!
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது;
கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;
இட்லியை எடுத்துக் கொண்டு,
வழக்கம்போல,
"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ;
நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! "
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!.

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.

"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;
நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;
மயங்கி விழுந்துட்டேன்;
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான்.

இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!
இதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்!

'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!'
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன..

"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உன்மைதான் ...

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...

புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....

*செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்*.

*ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்*.

*வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*.

படித்ததில் பிடித்தது!

Thursday, October 19, 2017

வார்த்தையின் சக்தி

வார்த்தையின் சக்தி

ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர்.

இதைப் பார்த்த சமய குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் எனக் கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். பிறகு அந்த சமய குரு, இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும் எனக் கூறினார்.

அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். சமய குரு சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான். வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தைத ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான்.

அதற்கு அந்த சமய குரு, இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார்.
இதைக் கேட்டதும் அவன், நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையேல் உங்களை அடித்து விடுவேன் என்ற படி அடிக்கப் பாய்ந்தான். பதற்றமே இல்லாத அந்த சமய குரு, முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி? இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றார்.

நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
ஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே, *'நல்லதையே நினை. நல்லதையே பேசு'* என அழகாக நம் முன்னோர்கள், சொல்லி விட்டனர்.

நாம் இன்று என்ன நிலையில் இருக்கின்றோமோ, அந்நிலையை கொடுத்தது, நம் எண்ணங்களே!!!

*எண்ணங்கள் அழகானால்..., எல்லாம் அழகாகும்...*

Friday, October 13, 2017

அம்மான் பச்சரிசி செடி

அம்மான் பச்சரிசி செடியில் இலைதான் அதிக அளவில் உணவுக்கு பயன்படுகிறது.

இதில் காய்க்கும் காய்களுக்கும் மருத்துவ குணம் உண்டு.

அம்மான் பச்சரிசி என்பது சிறு செடி வகையை சேர்ந்த தாவரம்.

இது அரிசி இனம் அல்ல.

ஒரு வகை கீரை இனம்.

தரையில் படர்ந்து வளரும்.

நீர் நிலைகளிலும், ஈரமான இடங்களிலும் செழித்து வளர்ந்து நிற்கும்.

மழைக்காலத்தில் அதிகமாக வளரும்.

இதன் இலை, தண்டை ஒடித்தால் பால் வரும்.

இந்த செடிக்கு சித்திரபாலாடை என்ற பெயரும் உண்டு.

அம்மான் பச்சரிசி செடியில் இலைதான் அதிக அளவில் உணவுக்கு பயன்படுகிறது.

இதில் காய்க்கும் காய்களுக்கும் மருத்துவ குணம் உண்டு.

இலை, உடலுக்கு குளிர்ச்சியளிக்க கூடியது. மலச்சிக்கலை தீர்க்கும். புண்களையும் ஆற்றும்.

அம்மான் பச்சரிசி செடியின் இலையை 10 கிராம் அளவு எடுத்து அரைத்து, மோரில் கலந்து குடித்தால் உடல் சூட்டினால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் நீங்கும்.

அதன் காரணமாக உண்டாகும் உடல் எரிச்சல், நமைச்சல் போன்றவையும் தீர்ந்து உடல் வலுப்பெறும்.

இந்த தாவரத்திற்கு தாய்ப்பாலை அதிகரிக்கும் சக்தி உள்ளது.

இலையை 10 கிராம் அளவு அரைத்து, பாலில் கலந்து தினமும் காலைவேளை மட்டும் ஒரு வாரம் தொடர்ந்து தாய்மார்கள் குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

இந்த இலையை சமைத்து சாப்பிட்டால் உடல் வறட்சி, வாய்ப்புண் குணமாகும்.

வாய், நாக்கு, உதடுப்பகுதியில் உருவாகும் வெடிப்புகள் நீங்கும்.

அம்மான் பச்சரிசி இலைக்கு கிருமிகளை அழிக்கும் சக்தியுள்ளது.

இலையை அரைத்து 5 கிராம் அளவு எடுத்து, பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும்.

மலம் கழிப்பதும் இலகுவாகும்.

சருமத்தில் கறுப்பு நிறத்தில் சிறு சிறு பருக்கள் சிலருக்கு தோன்றும்.

அம்மான் பச்சரிசி பாலை பருக்கள் மீது தொடர்ந்து தடவிவந்தால் பருக்கள் நீங்கும்.

மரு தொல்லையும் இருக்காது.

முகப்பருவை நீக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

கால் ஆணி இருக்கும் இடத்தில் பாலை தடவினால், வலி குறையும்.

இலையை அரைத்து பத்து கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து, கற்கண்டும் சேர்த்து பருகினால் உடல் சக்தி அதிகரிக்கும்.

உடல் பலகீனமாக இருக்கும்போது இதை பருகிவரலாம்.

இந்த தாவரம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உதவுவதாக பிலிப்பைன்ஸ் நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் இலையில் 100 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைத்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 100 மி.லி. வீதம் பருகிவந்தால் டெங்கு காய்ச்சல் குறைவதாக ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

இது ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் மற்றும் ரத்த அணுக்களை குறையவிடாமல் தடுத்து, டெங்கு வைரசை கட்டுப்படுத்துகிறது.