வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Wednesday, December 06, 2017

வெற்றி மிக அருகில்

விமர்சனங்களைப் புறம் தள்ளுங்கள்... வெற்றி மிக அருகில் - ஓர் உற்சாகக் கதை! #MotivationStory
‘ போராடும் குணத்தைக் கைவிட மறுக்கும் மனிதனுக்கு வெற்றி என்பது எப்போதுமே சாத்தியமான ஒன்றுதான்’ என்கிறார் பல சுயமுன்னேற்ற நூல்களை எழுதியிருக்கும் அமெரிக்க எழுத்தாளர், நெப்போலியன் ஹில் (Napoleon Hill). எது வந்தாலும் மோதிப் பார்த்துவிடத் துணிகிற மனிதர்கள்தான் எந்தத் துறையில் இருந்தாலும் சாதிக்கிறார்கள். அதற்கு மன உறுதி, தைரியம் எல்லாம் வேண்டும். பயிரை வளர்க்கிறீர்களா... அதை அறுவடை செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் நிலம்தான் பாழாகப் போகும். ஒரு வேலையை ஆரம்பித்தால், அதன் இறுதிக்கட்டம் வரை நின்று பார்த்துவிட வேண்டும். இல்லையென்றால் அதுவரை செய்த முயற்சி, செலவழித்த சக்தி, பொருள் அத்தனையும் வீணாகத்தான் போகும். இந்தக் கதை அந்த உண்மையைத்தான் அழுத்தம் திருத்தமாக உணர்த்துகிறது.

அவர் பெயர் ஸ்டூவ் லியோனார்டு (Stew Leonard). இருபத்தோரு வயது. வாழ்க்கையின் அத்தனை சந்தோஷங்களையும் கொண்டாடித் தீர்த்துவிடத் துடிக்கும் இளமைப் பருவம். கல்லூரிப் படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. சில வேளைகளில் ஒரு பேரிழப்பு, பெரிய பொறுப்பைத் தலையில் சுமக்கவைத்துவிடும். ஸ்டூவ் விஷயத்தில் நடந்தது அதுதான். அது வரை குடும்பத் தொழிலைப் பார்த்துக்கொண்டிருந்த அப்பா இறந்துபோனார். அந்தத் தொழிலைப் பார்க்கவேண்டிய மிகப் பெரிய பொறுப்பு ஸ்டூவிடம் வந்தது. ஸ்டூவின் குடும்பத்தினரின் பரம்பரைத் தொழில் பால் வியாபாரம். பண்ணையில் சில மாடுகள் வைத்திருந்தார்கள். பாலைக் கறந்து, வீடு வீடாகக் கொண்டுபோய் விநியோகிக்கும் வேலை ஸ்டூவுக்கு. அவர் திறமைசாலி. துறுதுறுப்பானவர். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்கிற வேட்கை கொண்டவர். அன்றாடம் உலகம் முழுக்க நடக்கும் பல மாற்றங்களை அசைபோடுபவர். பல புதிய நுட்பங்களைத் தன் தொழிலில் புகுத்த வேண்டும் என்கிற ஆர்வம் நிறைந்தவர். அது ஃபிரிட்ஜ் (Refrigerator) அறிமுகமாகியிருந்த காலம். அதைக் கொண்டு என்னென்னவோ செய்யலாம் எனத் திட்டம் போட்டார் ஸ்டூவ். `தயிர், சீஸ், நெய்... எனப் பலவிதமான பால் பொருள்களை பதப்படுத்தி வைக்க ஏற்றது. மொத்தமாக நிறைய ஃபிரிட்ஜுகளை வாங்கி, பால் பொருள்களுக்காகவே ஒரு கடையை (Dairy Store) ஆரம்பித்தால் என்ன என நினைத்தார்.

கையில் இருந்த பணத்தைக் கொண்டு, லோன் வாங்கி ஒரு கட்டத்தைக் கட்டவும் ஆரம்பித்துவிட்டார். அங்கே நிறைய வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்; அவர் கடையில் பாட்டில்களில் சேமித்துவைத்திருக்கும் பால், ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருக்கும் நெய், சீஸ் முதலான பால் பொருள்களைக் கண்ணாடி வழியாகப் பார்க்கிறார்கள்... இப்படியெல்லாம் கனவு கண்டார். ஒரு விஷயத்தை முன்னெடுத்துச் செய்யும்போதுதான் பல இடக்கான வேலைகளும் நடக்கும். நாலு பேர் நாலுவிதமாகப் பேசுவார்கள். `இதெல்லாம் வேலைக்காகாது’, `இவ்வளவு செலவழிச்சுப் பண்ற தொழில் எப்படி நடக்குது பார்க்கலாம்’ என்றெல்லாம் குத்தலாகப் பேசுவார்கள். ஸ்டூவ் விஷயத்தில் இதுதான் நடந்தது. கடைக்கான கட்டட வேலை முக்கால்வாசி முடிந்திருந்தபோது, பலரும் சந்தேகம் கிளப்பினார்கள். `சூப்பர் மார்க்கெட்டுக்குப் போற ஒருத்தர் பால் பொருள்களை வாங்குறதுக்காக தனியா உங்க கடைக்கு ஒரு ட்ரிப் அடிப்பாரா?’ என்று கேள்வி கேட்டார்கள். ஒரு எதிர்மறையான விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, எப்படிப்பட்ட தைரியசாலியும் தளர்ந்துபோய்விடுவான்; மனமொடிந்து போவான். ஸ்டூவும்கூட ஒரு கட்டத்தில் சோர்ந்துதான் போனார். கடையின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தவர் ஒருநாள், இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார்... ``இதுவரை ஒரு லட்சம் டாலருக்கு மேல செலவழிச்சிட்டோம். இதுக்கு மேல தாங்க முடியாது. இன்னும் அதிகமா செலவழிச்சு, கடை வியாபாரம் நல்லா நடக்கலைன்னா, திவாலாகிவிடுவோம்.’’ அன்று இரவு ஸ்டூவுக்குத் தூக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தார். பிறகு எழுந்து, கீழே வந்தார். கெட்டிலில் இருந்த காபியை எடுத்து, சூடுபடித்திக் குடித்தார். அங்கேயே அமர்ந்து ஆர அமர யோசித்தார். கடை நடத்துவதில் இருக்கும் பாசிட்டிவ், நெகட்டிவ் இரு அம்சங்களையும் அசைபோட்டார். எதிர்மறை அம்சங்கள் பெரிய பட்டியலாக நீண்டிருந்தன. நேர்மறைக்குக் கொஞ்சமே கொஞ்சம் வாய்ப்புத்தான் இருந்தது. அந்த நேரத்தில் ஸ்டூவ் இறைவனிடம் வேண்டினார்... `என் பிரச்னைகளையெல்லாம் தீர்த்துவை ஆண்டவரே’ என்று அல்ல. `பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியத்தையும் சக்தியையும் எனக்குக் கொடு கடவுளே’ என்று பிரார்த்தித்தார். அங்கேயே அமர்ந்திருந்தார்.

அடுத்த நாள் ஸ்டூவின் மனைவி மர்யான் (Maryann) எழுந்து கீழே வந்தார். “இங்கே என்ன பண்றீங்க?’’ `எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு மர்யான்.’’ ``ஏன்?’’ ``நம்ம தொழில் நல்லா நடக்காதுனு பல பேர் சொல்றாங்க. அது உண்மையாகிடுச்சுன்னா, நாம நொடிச்சுப் போயிடுவோம்.’’ ``நெகட்டிவா பேசறவங்களோட வார்த்தைகளுக்கு மதிப்புக் குடுக்காதீங்க. நாம் யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம்? ஒரு தொழிலை ஆரம்பிச்சு நடத்தப்போறோம். அவ்வளவுதானே.. தைரியமா இருங்க. ஒரு நிமிஷம்...’’ என்றவர் தன் அறைக்குப் போனார். திரும்பி வந்தபோது அவர் கையில் ஒரு சின்ன ஹேண்ட் பேக் இருந்தது. அதில் கைவிட்டு எதையோ எடுத்தார். ``இந்தாங்க... இதுல 3,300 டாலர் பணம் இருக்கு. இது, என் அம்மா எனக்காகச் சேர்த்துவெச்சிருந்த பணம். இதை நம்ம பிள்ளைங்களோட படிப்புக்கு ஆகுமேனு எடுத்துவெச்சிருந்தேன். இந்தப் பணத்தையும்வெச்சுக்கோங்க. ஆனா, நீங்க தொழில் நடத்தி நல்ல லாபம் சம்பாதிச்சதுக்குப் பிறகு, அதை எனக்குத் திருப்பிக் குடுத்துடணும்... சரியா?’’

ஸ்டூவுக்கு உடம்பில் புது ரத்தம் பாய்ந்ததுபோல் இருந்தது. மனைவியை அன்போடு அணைத்துக்கொண்டார்... நன்றி சொன்னார். என்ன நடந்தாலும் ஒருகை பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தார். விமர்சனங்களை இடது கையால் ஒதுக்கித் தள்ளினார். கடையை ஆரம்பித்தார். அவருடைய வியாபாரம் சூடுபிடித்தது. பல கிளைகளுடன் பரந்துவிரிந்தது. உலகின் சக்சஸ்ஃபுல் தொழில்களில் ஸ்டூவ் லியோனார்டின் டெய்ரி ஸ்டோரும் ஒன்று. ***

Wednesday, November 29, 2017

நுரையீரல் – பாதிப்புகளும், அதன் குறிகளும் அதற்கான சிகிச்சை முறைகளும்

நுரையீரல் – பாதிப்புகளும், அதன் குறிகளும் அதற்கான சிகிச்சை முறைகளும்

நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது.


காது, மூக்கு, தொண்டையும் பாதி க்கப்படுகிறது. இதயம் தொடர்பா ன பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க, நுரையீரலை பாதுகாப்பது மிக மிக முக்கியம்.

நம் சுவாசத்தை சீராக வைத்திருக் கும் நுரையீரலில், நோய் தாக்காம ல் இருக்க, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தை யும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.

நுரையீரல் பாதிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, நிமோனியா, காச நோய், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு நுரையீரல் புற்று நோயும் ஏற்படுகிறது. இத்துடன் பஞ்சு, குவாரி, சிமென்ட் உள்ளிட்ட தொழிலில் பணிபுரிவோருக்கும் நுரையீரல் சம்பந்த ப்பட்ட நோய்கள் அதிகம் தாக்குகின்றன.

நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்க ரை மற்றும் ரத்த அழுத்தமும் ஏற்படுகி றது. காது, மூக்கு, தொண்டையும் பாதிக்கப்படுகிறது. இதய ம் தொ டர்பான பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க நுரையீரலை பாதுகாப்பது மிக மிக முக்கியம்.

நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகள்

இருமல், சளி, மூச்சு திணறல், நெஞ்சு வலி, இருமலுடன் ரத்தம் வருதல், இளைப்பு போன்றவை நுரையீரல் பாதிப் புக்கான அறிகுறிகளா கும்.

இரண்டு வாரங்கள் தொடர்ந்து இருமல் இருந்தால் காசநோய் அல் லது ஆஸ் துமா ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறா ன நிலையில், மருத்துவரை அணுகி சளி மற்றும் எக்ஸ்-ரே பரிசோ தனை செய்து கொள்ள வேண்டும்; எவ்வித நோய் தாக்கப்பட்டிருக் கிறது என்பதை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை தொடர வேண்டும்.

பனிக்காலத்தில் வறண்ட காற் றை சுவாசிக்கும்போது நுரையீ ரல் பாதிக்கப்படும் என்பதால், இக்கால ங்களில் வெளியே செல் வதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. பஞ்சு, குவாரி, சிமென்ட் உள்ளிட்ட தூசி நிறைந்த இடங்களில் பணியா ற்றும் போது, முகத்துக்கு, “மாஸ்க்’ அணிந்து கொள் ள வேண்டும்.

சிகிச்சை முறைகள்

நுரையீரல் பாதிப்புக்கு, இரண்டு முறைகளில் சிகிச்சை அளிக்கப்படு கிறது. பரிசோதனையில், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன், ரிலீவர் மருந்தும், பாதிப்பு முற்றிய நிலையில் இருந்தால், “கன்ட்ரோலர்’ மருந்தும் அளிக்கப்படுகி ன்றன. இந்த மரு ந்துகளை, மருத்துவரின் பரிந்துரைப்படி பயன்படுத்த வேண்டும்; பரி சோதிக்கும் மருத்துவருக்குத்தான் நோயின் தன்மை மற்றும் அதன் தாக்கத் தின் அளவு தெரியும்.

குளிர்காலத்தில் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில், 50 சதவீதம் பேர், சுவாசம் மற்றும் நுரையீரல் சார்ந்த பாதிப்புகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளவே வருகின்றனர். சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலில் முக்கியமாக குளிர் மற்றும் பனி காலங்களில், சாதாரண அலர்ஜியான, சளி முதல் நிமோனியா

காய்ச்சல் வரை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஏற்கன வே நுரையீரல் பாதிப்புள்ளவர் களுக்கு, இக்காலங்களில் அந்நோயின் தன்மை தீவிர மடைய அதிக வாய்ப்புள்ளது.

அலர்ஜி என்பது ஒவ்வாமை யாகும். இது ஒருவருக்கு பல விதமாக வெளிப்படுகிறது. முக்கியமாக, இந்த ஒவ்வா மை உள்ளவர்களுக்கு சுவாச குழாய் சம்பந்தமான பிரச்னை அதிகம் காணப்படுகிறது. குளி ர்ந்த காற்று, தூசு ஆகியவற்றை சுவாசிக்கும்போது அவர்களுக்கு தும்மல், மூக்கில் நீர் வழிதல், கண்களில் அரிப்பு, மூக்கடைப்பு உள் ளிட்ட பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. இது “அலர்ஜிக் ரைனைட்டிஸ்’ என்றழைக்கப்படுகிறது. இந்த பிரச் னைகளுக்கு, ஒவ்வாமை எதிர்ப்பு மருந் துகளை தற்காலிகமாகவோ அல்லது நோயின் தன் மைக்கேற்ப தொடர்ச்சியா கவோ கொடுத்து, கட்டுக்குள் கொண்டு வரலாம். இந்த ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளை மாத்திரைகள் மூலமோ அல்லது,”ஸ்பிரே’ மருந்து வகையிலோ மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பிரச்னை வரும்முன் காக்கும் வகையில், ஒவ்வொருவரும் வீட்டையும் , சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத் துக் கொள்ளவேண்டும். இரு சக்கர வாகன ஓட்டிகள், “ஹெல்மெட்’ அணிந்து செல்வதன் மூலம், இந்நோயின் தாக்கம் குறைய வாய்ப்பு ள்ளது.

ஒவ்வாமையின் மற்றொரு வெளி ப்பாடு காசநோய் மற்றும் ஆஸ்து மா. காசநோய் மற்றும் ஆஸ்துமா உள்ளவ ர்களுக்கு குளிர்காலத்தில் நோயின் தாக்கம் அதிகமாக வாய் ப்புள்ளது. இவர்களுக்கு, வறட்டு இருமல் (குறிப் பாக இரவில்), மூச் சிரைப்பு, நெஞ்சில் பாரம் போ ன்ற தொந்தரவுகள் அதிகம் காணப்படும்; குளிர்காலத்தில் காற்றி ல் நிலவும் வறண்ட ஈரப்பதம், வைரஸ் இன்பெக்ஷன்(புளூ காய்ச்சல்) போன்ற வையே இதற்கு முக்கிய காரணம்.

ஆஸ்துமா பிரச்னையால் பாதிக் கப்பட்டுள்ளவர்கள் குளிர்காலத்தி ல் நோயின் தன்மை தீவிரமாகும் முன்பே, மருத்துவரை அணுகி நோ ய் வராமல் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தொடர் ந்து, “இன்ஹேலர்’ பயன்படுத்த வேண்டும்.

காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் அறிவுறுத்தல்படி மருந்துகளை தொடர்ந்து எடுத் துக்கொள்ளவேண்டும். காசநோய் தொற்றுநோய் என்பதால் இந்நோய் பாதிப்புக்குள்ளானோர் இருமல், தும்ம ல் வரும்போது துணியால் வாய் மற் றும் மூக்கு பகுதியை மறைத்துக் கொ ண்டால், அருகில் இருப்பவருக்கு பரவா மல் தடுக்க லாம்.

“இன்ஹேலர்’ எடுத்துக் கொள்வதி ல், மக்களிடையே தயக்கமும், சந்தேகமும் உள்ளது. முக்கியமாக, இவற்றால் பக்கவிளைவுகள் ஏற்படுமோ அல்லது இந்த மருந்துக்குஅடிமையாகி விடுவோமோ என்ற அச்சமும் தயக்கமும் உள்ளது. “இன்ஹேலரால்’ எவ்வித பக்க விளைவும் வராது.

நுரையீரல் பாதிப்புக்குள்ளா ன குழந்தைகள் முதல் அனைத்து வயது டையவர்களும் சர்க் கரை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப் பட்டவர்களும் குளிர் காலம் துவங்கும்முன்பே புளூ தடுப் பூசி எடுத்துக் கொண்டால், நிமோனியா என்ற நுரையீரல் நோயில் இரு ந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்

Thursday, October 26, 2017

ரெண்டு இட்லி!

ரெண்டு இட்லி!

இரக்க குண பெண்மணி ஒருத்தி 
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு,
ஏதோ முனகிக் கொண்டே போவான்.
இது அன்றாட வழக்கமாயிற்று!.

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,
கிழவன் என்ன முனகுகிறான் என்று
செவிமடுத்து கேட்டாள்.

அவன் முனகியது, இதுதான்:
" நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;
நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்."

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.
'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;
"நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு
கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும்,
"இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்;
" ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ;
ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்;
செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்" ன்னு
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.

'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்.
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்!
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,
கொலை வெறியாக மாறியது!
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது;
கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;
இட்லியை எடுத்துக் கொண்டு,
வழக்கம்போல,
"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ;
நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! "
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!.

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.

"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;
நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;
மயங்கி விழுந்துட்டேன்;
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான்.

இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!
இதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்!

'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!'
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன..

"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உன்மைதான் ...

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...

புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....

*செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்*.

*ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்*.

*வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*.

படித்ததில் பிடித்தது!

Thursday, October 19, 2017

வார்த்தையின் சக்தி

வார்த்தையின் சக்தி

ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர்.

இதைப் பார்த்த சமய குரு, நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் எனக் கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். பிறகு அந்த சமய குரு, இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும் எனக் கூறினார்.

அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். சமய குரு சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான். வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தைத ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான்.

அதற்கு அந்த சமய குரு, இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான் என சொன்னார்.
இதைக் கேட்டதும் அவன், நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையேல் உங்களை அடித்து விடுவேன் என்ற படி அடிக்கப் பாய்ந்தான். பதற்றமே இல்லாத அந்த சமய குரு, முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி? இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றார்.

நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
ஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே, *'நல்லதையே நினை. நல்லதையே பேசு'* என அழகாக நம் முன்னோர்கள், சொல்லி விட்டனர்.

நாம் இன்று என்ன நிலையில் இருக்கின்றோமோ, அந்நிலையை கொடுத்தது, நம் எண்ணங்களே!!!

*எண்ணங்கள் அழகானால்..., எல்லாம் அழகாகும்...*

Friday, October 13, 2017

அம்மான் பச்சரிசி செடி

அம்மான் பச்சரிசி செடியில் இலைதான் அதிக அளவில் உணவுக்கு பயன்படுகிறது.

இதில் காய்க்கும் காய்களுக்கும் மருத்துவ குணம் உண்டு.

அம்மான் பச்சரிசி என்பது சிறு செடி வகையை சேர்ந்த தாவரம்.

இது அரிசி இனம் அல்ல.

ஒரு வகை கீரை இனம்.

தரையில் படர்ந்து வளரும்.

நீர் நிலைகளிலும், ஈரமான இடங்களிலும் செழித்து வளர்ந்து நிற்கும்.

மழைக்காலத்தில் அதிகமாக வளரும்.

இதன் இலை, தண்டை ஒடித்தால் பால் வரும்.

இந்த செடிக்கு சித்திரபாலாடை என்ற பெயரும் உண்டு.

அம்மான் பச்சரிசி செடியில் இலைதான் அதிக அளவில் உணவுக்கு பயன்படுகிறது.

இதில் காய்க்கும் காய்களுக்கும் மருத்துவ குணம் உண்டு.

இலை, உடலுக்கு குளிர்ச்சியளிக்க கூடியது. மலச்சிக்கலை தீர்க்கும். புண்களையும் ஆற்றும்.

அம்மான் பச்சரிசி செடியின் இலையை 10 கிராம் அளவு எடுத்து அரைத்து, மோரில் கலந்து குடித்தால் உடல் சூட்டினால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் நீங்கும்.

அதன் காரணமாக உண்டாகும் உடல் எரிச்சல், நமைச்சல் போன்றவையும் தீர்ந்து உடல் வலுப்பெறும்.

இந்த தாவரத்திற்கு தாய்ப்பாலை அதிகரிக்கும் சக்தி உள்ளது.

இலையை 10 கிராம் அளவு அரைத்து, பாலில் கலந்து தினமும் காலைவேளை மட்டும் ஒரு வாரம் தொடர்ந்து தாய்மார்கள் குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

இந்த இலையை சமைத்து சாப்பிட்டால் உடல் வறட்சி, வாய்ப்புண் குணமாகும்.

வாய், நாக்கு, உதடுப்பகுதியில் உருவாகும் வெடிப்புகள் நீங்கும்.

அம்மான் பச்சரிசி இலைக்கு கிருமிகளை அழிக்கும் சக்தியுள்ளது.

இலையை அரைத்து 5 கிராம் அளவு எடுத்து, பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும்.

மலம் கழிப்பதும் இலகுவாகும்.

சருமத்தில் கறுப்பு நிறத்தில் சிறு சிறு பருக்கள் சிலருக்கு தோன்றும்.

அம்மான் பச்சரிசி பாலை பருக்கள் மீது தொடர்ந்து தடவிவந்தால் பருக்கள் நீங்கும்.

மரு தொல்லையும் இருக்காது.

முகப்பருவை நீக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

கால் ஆணி இருக்கும் இடத்தில் பாலை தடவினால், வலி குறையும்.

இலையை அரைத்து பத்து கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து, கற்கண்டும் சேர்த்து பருகினால் உடல் சக்தி அதிகரிக்கும்.

உடல் பலகீனமாக இருக்கும்போது இதை பருகிவரலாம்.

இந்த தாவரம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உதவுவதாக பிலிப்பைன்ஸ் நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் இலையில் 100 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைத்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 100 மி.லி. வீதம் பருகிவந்தால் டெங்கு காய்ச்சல் குறைவதாக ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

இது ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் மற்றும் ரத்த அணுக்களை குறையவிடாமல் தடுத்து, டெங்கு வைரசை கட்டுப்படுத்துகிறது.

Tuesday, September 26, 2017

நிலவேம்பு

நிலவேம்பு – மருத்துவ பயன்கள்

நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்; புத்தி தெளிவு உண்டாகும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும்.


நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.

நிலவேம்பு நிமிர்ந்த வளரியல் கொண்ட செடி. 30 செமீ முதல் ஒரு மீட்டர் வரை வளரக் கூடியது. நிலவேம்பு தண்டுகள் நாற்கோணப் பட்டையானவை. நிலவேம்பு இலைகள் நீள் முட்டை வடிவமானவை.

நிலவேம்பு மலர்கள், கணுக்களிலும் நுனியிலும் குறுக்கு மறுக்காக அமைந்தவை. பூக்கள் வெண்மையானவை. நாக்கு போன்று நீண்டு ஊதா நிறப் புள்ளிகளுடன் காணப்படும்.

நிலவேம்பு காய்கள் வெடிக்கும் தன்மையானவை. விதைகள் சிறியவை; மஞ்சள் நிறமானவை. நிலவேம்பு பெரியாநங்கை, சிறியாநங்கை, மிளகாய் நங்கை, குருந்து, கொடிக்குருந்து போன்ற மாற்றுப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

நிலவேம்பு தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் பரவலாக விளைகின்றது. மருத்துவர்களில் முக்கியமாக விஷக்கடி மருத்துவம் செய்பவர்களின் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது. அரிதாக சில இடங்களில் பயிர் செய்யப்படுகின்றது.

நிலவேம்பு முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. கசப்புச் சுவை அதிகமான தாவரங்களில் நிலவேம்பு முக்கிய இடம் வகிக்கின்றது. இந்தத் தாவரத்தில் மெத்தைல் சாலிசிலிக் அமிலம் காணப்படுகின்றது.

காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாள்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

முறைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.

நிலவேம்பு வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலை மாலை வேளைகளில் தொடர்ந்து 2 வாரங்கள் வரை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி பெறலாம்.

நிலவேம்பு இலைச்சாறு அரை டம்ளர் வீதம் இரண்டு வேளைகள் மூன்று நாள்கள் குடிக்க கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

5 கிராம் அளவு நிலவேம்பு இலைத் தூளைக் காலையில் உட்கொள்ள வேண்டும் அல்லது 5 பெரியா நங்கை இலைகளுடன் 10 சீரகம் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும். அல்லது வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் இரவில் மட்டும் 3 நாள்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்திப் பொடி செய்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். குளிக்கும் போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டுகடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

நிலவேம்பு இலையில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலையில் மட்டும் 2 வாரத்திற்கு குடித்து வர காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கிற்குப் பின்னர் ஏற்படும் அசதி தீரும்.

நிலவேம்புச் செடியை வளர்த்தால் அந்த வளர்ப்பிடத்திற்கு பாம்புகள் வருவதில்லை. பாம்புக் கடி விஷத்தை இந்தச் செடி முறிக்கும் என்பது போன்ற நம்பிக்கைகள் கிராம மக்களிடம் பரவலாக காணப்பட்ட போதிலும் அறிவியல் பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து இது உண்ணமையில்லை என்பது தெரியவந்துள்ளது.

விஷப் பாம்புகளினால் கடி பட்டவர்கள் நிலவேம்புச் செடியை உபயோகித்து குணம் காண முடியாது. இருப்பினும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும் தன்மை இந்த தாவரத்திற்கு உண்டு.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட உயர்நிலை ஆய்வுகளில் இருந்து நிலவேம்புச் செடிக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், டைபாய்டு எதிர்ப்பு சக்தியும் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது