வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Tuesday, November 15, 2016

வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய 15 மூலிகை

வீட்டில் அவசியம் வளர்க்க வேண்டிய 15 மூலிகைகளும்! அதன் அற்புதமான மருத்துவ பயன்களும்
அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது.
இன்று 60 சதவீத குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் பாசம், அரவணைப்பு கிடைப்பதில்லை. சின்னத் தும்மல், தலைவலி வந்தால் கூட இன்று உடனே டாக்டரிடம் தூக்கிச் சென்று விடுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் தலைவலி முதல் பிரசவம் வரை வீடுகளிலேயே கை வைத்தியத்தால் பார்த்திருக்கின்றனர்.
வீட்டில் வளரும் மூலிகைகளைப் பறித்து உரல் அல்லது அம்மியில் வைத்து அரைத்து கசாயம் போட்டு கொடுக்க இன்று பாட்டிமார்கள் இல்லை. கஷாயம் குடிக்க மறுக்கும் பேரனை ஓடிப் போய் பிடித்து மடியில் உட்காரவைக்க தாத்தாக்களும் இல்லை. ஆனாலும், தாத்தா, பாட்டிகள் இல்லாத குறையைப் போக்க மூலிகை இருக்கிறது நம்மிடம்.
வீட்டில் இருக்க வேண்டிய 15 மூலிகைகள், அவற்றின் பயன்பாடுகள் குறித்து நெல்லை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராசு விளக்குகிறார். “பெரும்பான்மையான வீடுகளில் மூலிகை வளர்ப்பதை விட்டுவிட்டு அழகுக்காக மலர்ச் செடிகளை வளர்த்து வருகின்றனர். ஒரு வீட்டில் 15 மூலிகைகள் எப்போதும் இருக்க வேண்டும். அவை என்னவென்றால் துளசி, தூதுவளை,சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, அருகம்புல், பூனை மீசை, ஆடாதொடை, நொச்சி, தழுதாழை, கழற்ச்சி ஆகியவைதான் இந்த மூலிகைகள். இந்த மூலிகைகள் ஒவ்வொன்றையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

1. துளசி
துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து, பிளிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.

2. தூதுவளை
தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதன் முள்செடி, தண்டு, இலை, வேர் ஆகியவற்றை நிழலில் 5 நாட்கள் காயவைத்து பொடி செய்து தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட ஆஸ்துமா குறையும். காதுமந்தம், நமச்சல், பெருவயிறு மந்தம் ஆகியவற்றிற்கும், மூக்கில் நீர்வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நோய் ஆகியவற்றிற்கும் தூதுவளை கீரை சிறந்தது.

3. சோற்றுக்கற்றாழை
இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.

4. மஞ்சள் கரிசாலாங்கண்ணி
ஞானத்திற்குரிய மூலிகை இது. இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.

5. பொன்னாங்கண்ணி
வயல்வெளிகளில் கொடுப்பை என்ற பெயரில் விளையும் மூலிகைதான் பொன்னாங்கன்னி கீரை. ‘பொன் ஆகும் காண் நீ’ என்பதன் சுருக்கமே பொன்னாங்கண்ணி என்பதாகும். இதை கீரையாக சமைத்து உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை உரி பெற்று கூர்மையாகும்.

6. நேத்திரப்பூண்டு
இதற்கு நாலிலை குருத்து, அருந்தலைப் பொருத்தி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இதன் இலைகளை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து வெயிலில் 5 நாட்கள் வைத்து வடிகட்டி கண்களில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் தொடக்கக் கால கண்புரை நோய் தடுக்கப்படும்.

7. நிலவேம்பு
நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு.

8. பூலாங்கிழங்கு
கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.

9. ஓமவள்ளி
கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

10. அருகம்புல்
அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.

11. ஆடாதொடை
எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்கு கொடுத்தால் இருமல் குணமாகும். பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்
.
12. பூனை மீசை மற்றும் விஷநாராயணி
இவை இரண்டுமே நமது நாட்டு மூலிகையல்ல. இதன் பூக்கள் பார்ப்பதற்கு பூனை மீசை பேன்று இருக்கும். இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை உணவுக்குப்பின் சாப்பிட்டால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கும், உப்புநீர் நோய்க்கும் உகந்தது.

13. நொச்சி
நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும் அல்லது நொச்சி இலைகளைப் பறித்து நிழலில் மூன்று நாட்கள் உலர்த்தி தலையணை உறைக்குள் இந்த இலைகளைப் போட்டு நிரப்பி தூங்கினால் ஒற்றைத் தலைவலி குறையும். தலைவலி மாத்திரை, தலைவலி தைலம் என எதுவுமே தேவையில்லை.

14. தழுதாழை
தழுதாழையை வாதமடக்கி இலை என்றும் கூறுவார்கள். இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல்வலி குறையும். மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும். ஒரு செடி வைத்தாலே போதும். இதன் வேர்கள் வேகமாக பரவி பக்கக் கன்றுகள் அதிகம் முளைக்கும்.

15. கழற்ச்சி
இதன் காய் பல வருடங்களுக்கு முன்பு விளையாட்டுப் பொருளாகவும், தராசுகளில் எடைக்கல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் விதைப் பருப்பை மிளகு சேர்த்து பொடியாக செய்து சாப்பிட்டு வந்தால் விதை வீக்கம் குணமாகும். இதன் இலையை விளக்கெண்ணெயில் போட்டு வதக்கி விதைப்பையில் கட்டினாலும் வீக்கம் குறையும்” என்றார்

Monday, November 14, 2016

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு


ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு

மாமன்னன் முதல் இராசராச சோழன் காலத்து சோழமண்டல வள நாடுகள்
1. அருண்மொழித் தேவ வளநாடு
2. உய்யக்கொண்டான் வளநாடு
3. இராசராச வளநாடு
4. நித்திவிநோத வளநாடு
5. இராசேந்திர சிங்க வளநாடு
6. இராசாசிரய வளநாடு
7. கேரளாந்தக வளநாடு
8. சத்திரிய சிகாமணி வளநாடு
9. பாண்டிகுலாசனி வளநாடு
உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு:
இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.
1. இராஜராஜன் காலத்து நாட்டுப் பிரிவு – மண்டலங்கள்
2. அதிராசராச மண்டலம் (சேலம் மாவட்ட்த் தென்பகுதி – கோவை – திருச்சி மாவட்டங்கள்)
3. இராசராசப் பாண்டி மண்டலம் (மதுரை – இராமநாதபுரம் – திருநெல்வேலி மாவட்டங்கள்)
4. செயங்கொண்ட சோழ மண்டலம் (தென்னார்க்காடு – செங்கற்பட்டு – வடவார்க்காடு – சித்னர் மாவட்டங்கள்)
5. சோழ மண்டலம் (தஞ்சாவூர் மாவட்டம் – திருச்சி மாவட்ட கிழக்குப் பகுதி)
6. நிகரிலி சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி – பெல்லாரி மாவட்டம்)
7. மலை மண்டலம் (திருவாங்கூர் – கொச்சி உள்ளடங்கிய சேரநாட்டு மேற்கு கடற்கரைப் பகுதி)
8. மும்முடிச் சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி – சேலம் மாவட்ட வடபகுதி)
9. வேங்கை மண்டலம் (கிருட்டின – கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட கீழைச் சாளுக்கிய நாடு)
மாமன்னன் முதல் இராசராச சோழன் கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகளின் படி தன் மனைவியர்கட்கு தஞ்சை அரண்மனையில் அமைத்துக் கொடுத்த மாளிகைகளின் பட்டியல்.
1. உய்யக்கொண்டான் தெரிந்த திருமஞ்சனத்தார் வேளம்
2. அபிமான பூஷணத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்
3. ராசராசத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம்
4. பஞ்சவன் மாதேவி வேளம்
5. உத்தம சீலியார் வேளம்
6. அருண்மொழித் தெரிந்த பரிகலத்தார் வேளம்
7. புழலக்கன் பெண்டாட்டி அவினிசிகாமணி கீழவேளம்
8. தஞ்சாவூர் பழைய வேளம்
9. பண்டி வேளம்
மாமன்னன் முதல் இராசராச சோழன் கல்வெட்டுக்களில் காணப்படும் குறிப்புகளின் படி தஞ்சை மாநகரில் அமைந்திருந்த அங்காடிகள்
1. திருபுவன மாதேவி பேரங்காடி
2. வானவன் மாதேவி பேரங்காடி
3. கொங்காள்வார் அங்காடி
4. இராசராச பிரும்ம மகாராசப் மாதேவி பேரங்காடி
இராசராசன் தனது கல்வெட்டுக்களில் குறிப்பிட்டுள்ள தஞ்சை மாநகர தெருக்கள் பட்டியல்
01. வடக்குத் தனிச்சேரி
02. தெற்குத் தனிச்சேரி
03. கொங்காள்வார் அங்காடி
04. ரெளத்ர மாகாளத்து மடவளாகத்தெரு
05. பிரமகுட்டத்து தெரு
06. ஜய பீமதளித் தெரு
07. ஆனைக்காடுவார் தெரு
08. பன்மையார் தெரு
09. வீர சோழப் பெருந்தெரு
10. இராசராச வித்யாதரப் பெருந்தெரு
11. வில்லிகள் தெரு
12. மடைப்பள்ளித் தெரு
13. சயங்கொண்ட சோழப் பெருந்தெரு
14. சூர சிகாமணிப் பெருந்தெரு
15. மும்முடிச் சோழப் பெருந்தெரு
16. சாலியத் தெரு
17. நித்தவிநோதப் பெருந்தெரு
18. வானவன்மாதேவிப் பெருந்தெரு
19. வீரசிகாமணிப் பெருந்தெரு
20. கேரள வீதி
இராசராச சோழன் போர் வெற்றி கண்ட நாடுகள்:
01. காந்தளூர் ( திருவனந்தபுரம்)
02. விழிஞம்
03. பாண்டிய நாடு
04. கொல்லம்
05. கொடுங்கோளூர்
06. குடமலை நாடு (குடகு)
07. கங்கபாடி (கங்கநாடு)
08. நுளம்பபாடி
09. தடிகைபாடி (மைசூர்)
10. ஈழநாடு (இலங்கை)
11. மேலைச்சாளுக்கிய நாடு
12. வேங்கை நாடு
13. சீட்புலி நாடு
14. பாகி நாடு
15. கலிங்க நாடு
16. பழந்தீவு பன்னீராயிரம் ( மாலைத்தீவுகள்)
சோழ நாட்டில் கோட்டை என முடியும் ஊர்களில் சில:
அத்திக்கோட்டை
அருப்புக்கோட்டை
ஆத்திக்கோட்டை
ஆவணக்கோட்டை
ஆதனக்கோட்டை
ஆய்க்கோட்டை
இடைங்கான்கோட்டை
ஈச்சங்கோட்டை
உள்ளிக்கோட்டை
உச்சக்கோட்டை
எயிலுவான் கோட்டை
ஒளிக்கோட்டை
பட்டுக்கோட்டை
பரமக்கோட்டை
பரக்கலகோட்டை
பரவாக்கோட்டை
பஞ்சநதிக்கோட்டை
பருதிக்கோட்டை
பத்தாளன்கோட்டை
பாச்சிற்கோட்டை
பனையக்கோட்டை
பரங்கிலிகோட்டை
பழங்கொண்டான் கோட்டை
பாலபத்திரன் கோட்டை
பாத்தாளன் கோட்டை
பாதிரங்கோட்டை
பாளைங்கோட்டை
பராக்கோட்டை
பிங்கலக்கோட்டை
புத்திகழிச்சான்கோட்டை
புதுக்கோட்டை
பெரியக்கோட்டை
பொய்கையாண்டார் கோட்டை
பொன்னவராயன்கோட்டை
கள்ளிக்கோட்டை
கண்டர் கோட்டை
கந்தர்வக்கோட்டை
கல்லாக்கோட்டை
கக்கரக்கோட்டை
கரம்பயன்கோட்டை
கருக்காக்கோட்டை
கரும்பூரான்கோட்டை
கரைமீண்டார் கோட்டை
காரைக்கோட்டை
காரிகோட்டை
காசாங் கோட்டை
கிள்ளிக் கோட்டை
கிள்ளுக்கோட்டை
கீழைக்கோட்டை
கீழாநிலைக்கோட்டை
குன்னங் கோட்டை
கூராட்சிகோட்டை
நடுவிக்கோட்டை
நள்ளிக்கோட்டை
நம்பன்கோட்டை
நாஞ்சிக்கோட்டை
நாயக்கர் கோட்டை
நாட்டரையர் கோட்டை
நெடுவாக்கோட்டை
நெல்லிக்கோட்டை
மல்லாக்கோட்டை
மலைக்கோட்டை
மண்டலகோட்டை
மயிலாடு கோட்டை
மயிலாளிகோட்டை (மயில்கோட்டை)
மருதக்கோட்டை
மகிழங்கோட்டை
மழவன்கோட்டை (மகழன்கோட்டை)
மண்டலகோட்டை
மானரராயன் புதுக்கோட்டை
மாங்கோட்டை
மின்னொளிக்கோட்டை (மின்னாளிக்கோட்டை)
மூவரையர் கோட்டை
மேலைக்கோட்டை
தம்பிக்கோட்டை
தளிக்கோட்டை
தர்மக்கோட்டை
தாமரங்கோட்டை
தாமிரன்கோட்டை
திருமங்கலக்கோட்டை
திருமலைக்கோட்டை
திருமக்கோட்டை
துரையண்டார்க் கோட்டை
துறையாண்டார் கோட்டை
தெற்குக் கோட்டை
சத்துருசங்காரக் கோட்டை
சாக்கோட்டை
சாய்க்கோட்டை
சிறுகோட்டை
சுந்தரகோட்டை
சூரக்கோட்டை
செங்கோட்டை
செஞ்சிக்கோட்டை
சோணாகோட்டை
சேண்டாகோட்டை
வாட்டாட்சிகோட்டை (வாவாசிகோட்டை)
வத்தானக்கோட்டை
வாகோட்டை
வாளமரங் கோட்டை
வாழவந்தான் கோட்டை
வீரயன்கோட்டை (வீரியன்கோட்டை)
வெண்டாக்கோட்டை
வெட்டுவாகோட்டை
இராஜராஜனின் அக்காள் குந்தவை, வல்லவராயர் வந்தியத்தேவரை மணந்தாள். கல்வெட்டுகள் குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும் பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன. தன் தமக்கையிடத்தில் இராஜராஜன் பெருமதிப்பு வைத்திருந்தான் தான் எடுப்புவித்த தஞ்சை பெரிய கோயிலுக்கு, தன் தமக்கை கொடுத்தவற்றை நடு விமானத்தின் கல்மீது, தான் கொடுத்தவற்றைப் பற்றி வரைந்துள்ள இடத்திற்கு அருகே வரையச் செய்ததோடு, தன் மனைவிமார்களும் அதிகாரிகளும் கொடுத்தவற்றைச் சுற்றியுள்ள பிறைகளிலும், தூண்களிலும் பொறிக்கச் செய்தான்.
இராஜராஜன் மூன்று புதல்விகளைப் பெற்றிருத்தல் வேண்டும், ஏனெனில் திருவலஞ்சுழியிலுள்ள ஒரு கல்வெட்டு சாளுக்கிய விமலாத்தினை மணந்த இளைய குந்தவையைத் தவிர, மாதேவடிகள் என்பாளை நடு மகளாகக் குறிப்பிட்டுள்ளது.
அதிகாரிகளும் திறை செலுத்திய குறுநில மன்னர்களும்இராஜராஜ சோழனுடைய அதிகாரம் கங்க, வேங்கி மண்டலங்களிலும் கங்க நாட்டு மன்னனுக்குத் திறை செலுத்திய குறுநில மன்னர்கள் மீதும் பரவியிருந்தது. மும்முடிச் சோழன் என்றழைக்கப்பட்ட பரமன் மழபாடியார் என்னும் படைத்தலைவன் சீத்புலி, பாகி ஆகிய நாடுகளை வென்றவன்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், பழுவூரைச் சுற்றியுள்ள சிறுபகுதி ஒன்றின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தவர் பழுவேட்டரையர் என்பவர்களாவார். இவர்கள் சோழ குடும்பத்திற்கு நெருங்கிய உறவினராக இருந்தனர். முதலாம் பராந்தக சோழன் பழுவேட்டரையரின் இளவரசியை மணந்திருந்தான். இராஜராஜனுக்குத் திறை செலுத்திய பழுவூர்க் குறுநில மன்னனான அடிகள் பழுவேட்டரையன் கண்டன்மறவன் என்பவன் குறுநில மன்னர்களுக்கு உரிய சிறப்புக்களையும் பெற்று ஆட்சி செய்து வந்தான்.
மதுராந்தகன் கண்டராதித்தன் உத்தம சோழனின் மகன் ஆவான், இராஜராஜன் ஆட்சியில் இவன் கோயில்களைக் கண்காணித்து, அவற்றில் தவறிழைத்தவர்களை விசாரித்து, தண்டித்து, எதிர்காலத்தில் தவறிழைக்காதபடி நல்ல நிலையில் பாதுக்காகும் ஏற்பாடுகளைச் செய்தான்.
வைதும்பர்களைப் போன்று, முதலாம் பராந்தகனிடம் தோல்வியுற்ற வாணர்களும், சோழர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களது நிர்வாகத்தில் முக்கிய அதிகாரிகளாகப் பங்கேற்றனர். மாறவன் நரசிம்மவர்மன் என்ற வாண மன்னன் தென் ஆற்காடு மாவட்டத்தில் ஜம்பையை அடுத்த பகுதிகளை இராஜராஜனது இறுதிக் காலத்தில் ஆட்சி செய்தான்.
பேராட்சி முறையில் மன்னனுக்குத் துணை செய்த அலுவலர்கள்:
1. உத்திர மந்திரி
2. பெருந்தர அதிகாரிகள்
3. திருமந்திர ஓலை
4. திருமந்திர ஓலை நாயகம்
5. ஒப்பிட்டுப் புகுந்த கேழ்வி
6. வரியிலிடு
7. காடுவெட்டி
8. உடன் கூட்டத்து அதிகாரி
9. அனுக்கத் தொண்டன்
10. நடுவிருக்கை
11. விடையில் அதிகாரி
12. உள்வரி திணைக்களத்துக் கண்காணி
13. புரவரித் திணைக்களம்
14. புரவரி திணைக்களத்து நாயகம்
15. வரிப் பொத்தகம்
16. முகவெட்டி
17. வரிப்பொத்தகக் கணக்கு
18. வரியிலிடு புரவரி திணைக்களத்து நாயகம்
19. கடமை எழுதுவோன்
20. பட்டோலை
21. ராகாரிய ஆராய்ச்சி
22. விதிசெய்
பெண் அதிகாரிகள்:
அரசியின் ஆணையை நிரவேற்றிய பெண் அதிகாரி ”அதிகாரிச்சி” என்று அழைக்கப் பட்டாள்
சபைக்குரிய அலுவலர்கள்
பிணக்கறுப்பான் (அ) நடுநிலையாளன்
கிராமசபை நடைபெறும்போது உதவி செய்வதோடு அங்கு ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நடுநிலையாக இருந்து தீர்ப்பவனாவான்.
கணக்கன்:
சபைக்குரிய கணக்கை எழுதுபவன் ஆவான். சபை விரும்பும்போது கணக்கை அவ்வப்போது காட்டுவதோடு ஆண்டு இறுதியில் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
கீழ்க்கணக்கன். கணக்கனுக்கு உதவி செய்பவன்:
பாடி காப்பான்:
கலகம், திருட்டு முதலான குற்றங்கள் ஊரில் நிகழாவண்ணம் காப்பவன்.
தண்டுவான்:
கிராம மக்கள் அரசிற்கும், ஊர்ச்சபைக்கும் கொடுக்க வேண்டிய வரிகளை வலிப்பவனாவான்.
அடிக்கீழ் நிற்பான்:
ஊர்ச் சபையாருக்குக் குற்றவேல் புரிபவன்.
சோழர் காலத்தில் மக்களுக்கு இடப்பட்ட வரிகள்
மக்களின் தேவைகள் மகேசனின் தேவைகள், அதை நிறைவேற்ற அரசுக்கு பொருள் வேண்டாமா?
இதோ அரசின் வருவாய்க்காண ‘வரி’கள்:
1. அங்காடிப் பட்டம்
2. இடப்பாட்டம்
3. இலைக் கூலம்
4. இரவுவரி
5. இறை
6. ஈழம்
7. உல்கு
8. ஊரிடுவரி
9. எச்சோறு
10. ஏரிப்பாட்டம்
11. ஓடக்கூலி
12. கண்ணாலக்காணம்
13. காவேரிக்கரை வினியோகம்
14. குசக்காணம்
15. குடிமை
16. சபாவினியோகம்
17. சித்தாயம்
18. சில்லிறை
19. சில்வரி
20. செக்கிறை
21. தட்டார்ப் பாட்டம்
22. தரகு
23. தறியிறை
24. நாடுகாவல்
25. நீர்க்கூலி
26. பாடிகாவல்
27. பூட்சி
28. போர்வரி
29. மரமஞ்சாடி
30. மரவிறை
31. மனை இறை
32. மீன் பாட்டம்
33. வண்ணாரப்பாறை
சோழர்கால கப்பல்கள்:
கடல் கடந்து வாணிகத்திலும், ஆதிக்கத்திலும் கோலோச்சிய சோழர்கள் நீர்ப்போக்குவரத்திலும் சிறந்து விளங்கினர். இதோ கி.பி. 9 – 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம் என்னும் நூல் குறிப்பிடும்
கப்பலின் பெயர்கள்.
1. வங்கம்
2. பாடை
3. தோணி
4. யானம்
5. தங்கு
6. மதலை
7. திமில்
8. பாறு
9. அம்பி
10. பாரி
11. சதா
12. பாரதி
13. நௌ
14. போதன்
15. தொள்ளை
16. நாவாய்
சோழர் கால கல்வெட்டுக்களில் மாதங்கள்:
மேச ஞாயிறு – சித்திரை மாதம்
ரிசிப ஞாயிறு – வைகாசி மாதம்
மிதுன ஞாயிறு – ஆனி மாதம்
கடக ஞாயிறு – ஆடி மாதம்
சிம்ம ஞாயிறு – ஆவணி மாதம்
கன்னி ஞாயிறு – புரட்டாசி மாதம்
துலா ஞாயிறு – ஐப்பசி மாதம்
விருச்சிக ஞாயிறு – கார்த்திகை
தனுர் ஞாயிறு – மார்கழி மாதம்
மகர ஞாயிறு – தை மாதம்
கும்ப ஞாயிறு – மாசி மாதம்
மீன ஞாயிறு- பங்குனி மாதம்
சோழர் கால இலக்கண நூல்கள்:
தண்டியலங்காரம்
நன்னூல்
நேமிநாதம்
புறப்பொருள் வெண்பாமாலை
யாப்பெருங்கலம்
வீரசோழியம்
வெண்பாப் பாட்டியல்
சோழர் கால நிகண்டு:
பிங்கலந்தை
சோழர் கால ஏரிகள்:
செம்பியன் மாட்தேவிப் பேரேரி – கண்டராதித்தம்
மதுராந்தகம் ஏரி- மதுராந்தகம்
பொன்னேரி – ஜெயங்கொண்டம்
வீரநாராயண பேரேரி- வீராணம்
திரிபுவனப் பேரேரி – திரிபுவனம் (பாண்டிச்சேரி)
வீரசிகாமணிப் பேரேரி- அல்லூர்
திரிபுவன மாதேவப் பேரேரி – புத்தூர்
கவீர ஏரி ( கவிநாடு ஏரி) – புதுக்கோட்டை
சோழர் கால துறைமுகப்பட்டினங்கள்:
பழவேற்காடு.
சென்னப்பட்டினம்
மாமல்லை.
சதுரங்க்கப்பட்டினம்
வசவ சமுத்திரம்
மரக்கானம்
கடலூர்
பரங்கிப்பேட்டை
காவேரிப்பூம்பட்டினம்
தரங்கம்பாடி
நாகப்பட்டினம்
முத்துப்பேட்டை
தொண்டி
தேவிப்பட்டினம்
அழகங்குளம் (மருங்கூர்ப்பட்டினம்)
இராமேசுவரம்
பெரிய பட்டினம்
குலசேகரப்பட்டினம்
தூத்துக்குடி
கொற்கை
காயல்பட்டினம்
குமரி.
உலகளந்தான் கோல்:
சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராசன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறைச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது.
எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு அசாதாரண பணி, இதனை மிகவும் சீரிய முறையில் சாதித்த சோழராஜனின் மகுடத்தில் இந்த அரிய பணி ஒரு வைரம்.
உலகளந்தான் கோல் பற்றிய சில விவரங்கள்:
24 விரல் கொண்ட முழம் – கிஷ்கு
25 விரல் கொண்ட முழம் – பிரஜாப மத்தியம்
26 விரல் கொண்ட முழம் – தனுர் முஷ்டி
27 விரல் கொண்ட முழம் – தனுர் கிரஹம்
28 விரல் கொண்ட முழம் – பிராச்யம்
29 விரல் கொண்ட முழம் – வைதேகம்
30 விரல் கொண்ட முழம் – வைபுல்யம்
31 விரல் கொண்ட முழம் – பிரகீர்ணம்
33” ஆங்கில அளவிற்கு சமமானது கிஷ்கு முழமாகும்.
இராஜராஜன் பற்றிய புனைவு ஆக்கங்கள்
இராஜராஜ சோழன் – கலைமாமணி ஆர்.ராமநாதன் என்பவரால் எழுதப்பட்ட நாடக பிரதி.இம் மேடை நாடகபிரதியே பின்னர் சிவாஜி கணேசன் நடிப்பில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.இந்நாடகப்பிரதி நூல்வடிவாக பிரேமா பிரசுரம் சென்னை-24 ஆல் வெளியிடப்பட்டுள்ளது.தென்னிந்திய பல்கழைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட Study Material ஆகவும் இந்நூல் காணப்படுகின்றது.
பொன்னியின் செல்வன் – கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்ட வரலாற்று நாவல் இதில் அருண்மொழிவர்மன் எனும் இயற்பெயருடன் இராஜ இராஜனின் இளமைப்பருவம் பற்றிய தகவல்களுடன் நாவல் எழுதப்பட்டுள்ளது.
உடையார் – பாலகுமாரனால் எழுதப்பட்டது.இராஜ இராஜன் பேரரசனான பின்னர் நடந்த நிகழ்வுகளைப்பற்றி குறிப்பிடுகின்றது.
காந்தளூர் வசந்தகுமாரன் கதை – சுஜாதாவால் எழுதப்பட்டது.இராஜ இராஜன் காலத்தில் காந்தளூர் சாலையில் இடம்பெற்ற போர் பற்றிய நிகழ்வுகளை குறிக்கின்றது

Tuesday, October 18, 2016

ஆண்கள் வெள்ளையாக மாற

ஆண்களே வெள்ளையாக வேண்டுமா?

அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

வெயிலில் அதிகம் சுற்றுவதால், ஆண்களின் சருமம் விரைவில் கருமையாகிவிடும். இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றினை நீரில் சரிசம அளவில் கலந்து, சருமத்தின் மீது தடவி 10 நிமிடம் கழித்து கழுவலாம். இல்லாவிட்டால், எலுமிச்சை சாற்றுடன் சிறிது தேன் கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்

கற்றாழை

பெரும்பாலான வீட்டில் கற்றாழை இருக்கும். அத்தகைய கற்றாழை ஜெல்லை தினமும் முகத்திற்கு காலையிலும், மாலையிலும் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், சரும கருமை நீங்கி, சருமம் வெள்ளையாகும்.

கடலை மாவு

கடலை மாவுடன் பால் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ, சருமத்தில் உள்ள கருமை நீங்கும். இந்த முறையை ஆண்கள் தினமும் பின்பற்றி வந்தால், கருமை நீங்குவதோடு, முகம் பொலிவு பெறும்.
   
சந்தனம்

சந்தனப் பொடி குளிர்ச்சிமிக்கது மற்றும் இது சரும கருமையைப் போக்கவல்லதும் கூட. அத்தகைய சந்தனப் பொடியுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உலர வைத்து கழுவ வேண்டும்.
   
வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயைக் கொண்டு தினமும் முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, சருமத்தில் இருக்கும் கருமையை நீக்கும்.
   
முல்தானி மெட்டி

1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர்ந்த பின் கழுவ வேண்டும்.

Thursday, September 15, 2016

உறவுகள் மேம்பட A to Z

*உறவுகள் மேம்பட A to Z*

மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக்
கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம். அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்!

*A - Appreciation*
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

*B - Behaviour*
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

*C - Compromise*
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

*D - Depression*
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

*E - Ego*
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

*F - Forgive*
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

*G - Genuineness*
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

*H - Honesty*
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

*I - Inferiority Complex*
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

*J - Jealousy*
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

*K - Kindness*
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

*L - Loose Talk*
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

*M - Misunderstanding*
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

*N - Neutral*
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

*O - Over Expectation*
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

*P - Patience*
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

*Q - Quietness*
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

*R - Roughness*
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

*S - Stubbornness*
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

*T - Twisting*
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

*U - Underestimate*
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

*V - Voluntary*
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

*W - Wound*
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

*X - Xerox*
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

*Y - Yield*
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

*Z - Zero*
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்.